• March 18, 2026

விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்; தணிக்கை வாரியம் அறிவிப்பு

 விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்;  தணிக்கை வாரியம் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படமாக அறிவித்த  ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். விஜய்,மற்றும்  பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், அரசியல் பின்னணி கொண்ட கதைக் கருவைக் கொண்டது. ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட இப்படம், தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனைகளால் தள்ளிப்போனது.

இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நீதிமன்றம் சென்றது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது. மார்ச் 9-ம் தேதி நடைபெறவிருந்த மறுஆய்வு, உறுப்பினர்களின் உடல்நலக்குறைவால் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியாக நேற்று (மார்ச் 17) மும்பையில் நடைபெற்றது.

தமிழகத்தைச் சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறுஆய்வில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், படத்தில் இடம்பெற்றுள்ள நேரடி அரசியல் வசனங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான காட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

குறிப்பாக, நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக இயங்கி வருவதால், அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது சிக்கலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும் எனத் தணிக்கை வாரியம் கைவிரித்து விட்டது,

படத்தைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிடத் தணிக்கை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் தலையீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ‘ஜனநாயகன்’ படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை படம் வெளியாக வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாவதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *