கோவில்பட்டியில் கோவில் முன்பு நடனமாடி ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 2 இளம்பெண்கள் வருத்தம் தெரிவித்தனர்
Oplus_16908288
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு குத்துப்பாட்டுக்கு 2 இளம்பெண்கள் நடனமாடி, சமூக வலைதளங்களில் பதிவிட்ட னர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.பி. ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பினார்.

அந்த மனுவில், ” “கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு இரண்டு இளம்பெண்கள் குத்துப்பாட்டுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு. கோயிலின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் வகையில் செயல்பட்ட அந்தப் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி, வரும் 23-ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.” என்று கூறி இருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து முறைப்படி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்: “சம்பந்தப்பட்ட இளம்பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினோம். அவர்கள் தங்களின் செயலுக்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததுடன் இது போன்ற ,செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்,” எனத் தெரிவித்தனர்.







