வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி பாதிப்பு: உள்நாட்டில் கடலை மிட்டாய் விற்பனை செய்ய தற்காலிக ஜிஎஸ்டி தளர்வு- மத்திய மந்திரிக்கு துரை வைகோ எம்.பி. கடிதம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு மதிமுக எம். பி. துரை வைகோ அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது :-
உலகப் புகழ்பெற்றதும், தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருளாகவும், புவியியல் அடையாள (GI) அங்கீகாரம் பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதை தங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சார்ந்த பதற்ற நிலைமைகளின் காரணமாக, கோவில்பட்டி கடலை மிட்டாயின் வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதிக்காக தயாராக இருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையின்றி கிடப்பில் உள்ளன. இது துறைக்கு மிகுந்த நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இத்துறையின் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்றுமதி தடை, நிலக்கடலை மற்றும் பெட்ரோலிய சார்ந்த பொதியிடும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இணைந்து, இச்சிறு உற்பத்தியாளர்களை கடுமையான நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கிடப்பில் உள்ள பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்ய வசதியாக தற்காலிக ஜிஎஸ்டி தளர்வு வழங்க மத்திய அரசு பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த சத்தான பாரம்பரிய உணவுப் பொருளை பிரதமர் போஷண் (மத்தியான உணவுத் திட்டம்) திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதையும் அரசு பரிசீலிக்கலாம்.
அதேபோல், ரத்து செய்யப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்களால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய, இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் (ECGC) மூலம் தேவையான ஆதரவு வழங்கப்பட வேண்டும். மேலும், வளைகுடா நாடுகளைத் தவிர பிற மாற்று ஏற்றுமதி சந்தைகளை கண்டறிய, APEDA மற்றும் வெளிநாட்டு இந்திய தூதரகங்களின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
இத்துறையில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, வங்கிகள் கடன் திருப்பிச் செலுத்துவதில் அவகாசம் (மொரட்டோரியம்) வழங்கவும், பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கூடுதல் வேலை மூலதன உதவி வழங்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். இதன் மூலம் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்ச்சியாக நிலைநிறுத்தப்படலாம்.

இந்த GI அங்கீகாரம் பெற்ற பாரம்பரியத் தொழிலை பாதுகாப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, தங்களது அமைச்சகம் உடனடி தலையீடு செய்து தேவையான உதவிகளை விரைவாக வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு துரை வைகோ எம்பி கூறியுள்ளார்







