• March 12, 2026

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது; மத்திய அரசு விளக்கம்

 சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது; மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது; என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி மத்திய பெட்ரோலியத் துறை இணை மந்திரி சுஜாதா சர்மா கூறியதாவது:-

எல்.என்.ஜி. எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உடன் 2 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தட்டுப்பாடு இல்லாமல் நமக்கு எரிவாயு வருகிறது. எனவே, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம். கச்சா எண்ணெய் விநியோகமும் பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.

வழக்கத்தைவிட கூடுதலாகவே பெட்ரோலியப் பொருட்கள் நம் நாட்டுக்கு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமின்றி பல மார்க்கமாக நமக்கு கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்களில் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக ஹார்மூஸ் வழியாக 55 சதவீத கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும். ஆனால், போர் பதற்றத்திற்கு பிறகு, பல மார்க்கங்கள் வழியாக 75 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது. இது வழக்கத்தைவிட கூடுதல் ஆகும்.

வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் காத்திருப்பு, வழக்கம் போலவே 2½ நாள் தான். எனவே, நுகர்வோர் முண்டியடித்துக் கொண்டு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களும் முன்பைவிட கூடுதலாக உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.

100 சதவீதத்திற்கு மேலாக தற்போது உற்பத்தி நடந்து வருகிறது. நம் நாட்டில், ஒரு நாளைக்கான எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள். அதில் 97.5 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சிய தேவைக்கு மட்டுமே இறக்குமதி செய்து வருகிறோம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் 47.4 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் எரிவாயு வினியோகத்தில் தடை ஏற்பட்டது. அதுவும் தற்காலிகமானது தான். ஏனெனில் நாம் மாற்றுப்பாதையில் கொள்முதல் செய்ய ஆரம்பித்துவிட்டோம். நமக்கான தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம்.

தவிர, உள்நாட்டு எல்.பி.ஜி., உற்பத்தியை 25 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளோம். அதற்கான முன்னுரிமையை வீட்டு உபயோக நுகர்வோருக்கு வழங்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு சுஜாதா சர்மா கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *