கோவில்பட்டி கோவிலில் 25 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 25 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியான தம்பதிகளை சிறப்பிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கோவில்களில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதிகளை சிறப்பு செய்து வருகின்றனர்.
அதன்படி கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று 70 வயது பூர்த்தி அடைந்த 25 தம்பதிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

25 தம்பதிகளுக்கும் தலா ரூ.2,500 மதிப்பிலான வேட்டி, சட்டை, சேலை, சீர்வரிசை மற்றும் மங்களப் பொருட்கள், சுவாமி அம்மன் புகைப்படம் கோவில் சார்பில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், மாவட்ட அறங்காவலர் இந்துமதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.







