கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ;கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகவும், அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாகவும் அனுசரிக்கப்படும். இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்து விடுவார்கள்.
அத்துடன், வீடுகளில், திருமணம், புதுமனை புகுவிழா என எந்த விதமான கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்த மாட்டார்கள்.
இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வண்ணம் தவக்காலத்தின்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் இறைமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து முக்கியமான ஆலயங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்வர்.

இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும்.
அந்த வகையில், தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று (18-ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் தவக்கால முதல் நாளான இன்று காலை 6 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
பின்னர் கடந்த ஆண்டு குருத்தோலை பவனியில் கிறிஸ்துவமக்கள் பயன்படுத்திய குருத்தோலைகளை சேகரித்து ஆலயத்தில் வைத்து எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலால் கிறிஸ்துவமக்கள் நெற்றியில் அருட்தந்தையர்கள் “மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் எனும் இறைவார்த்தையை கூறி சிலுவை அடையாளமிட்டனர்.
தவக்காலம் தொடர்ந்து 40 நாட்கள் அனுசரிக்கப்படும். இந்நாட்களில் ஆலயங்களில் சிலுவைப் பாதையும், திருப்பலியும், தவக்கால நடை பயணங்களும் நடைபெறுகிறது.







