கொலை முயற்சி வழக்கு: கணவன், மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டு ஜெயில்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 68) என்பவரை கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அவரது சகோதரர் செந்தூர பாண்டி (77), அவரது மனைவி உத்தமி (68) மற்றும் மகன் சுரேஷ் (42) ஆகியோர் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜகுமார் நேற்று (12.2.2026) செந்தூரப்பாண்டி சுரேஷ், மற்றும் உத்தமி ஆகியோரை குற்றவாளி என தீர்ப்பளித்து தலா 4 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சுதீர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர். முருகன் மற்றும் காவல்துறையினர், அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேது ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நை. சிலம்பரசன் பாராட்டினார்.







