திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை; கனிமொழி எம்.பி
2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (10/02/2026) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி,கூறியதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்தத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக அறிவிக்காத பலவற்றை நிறைவேற்றித் தந்திருக்கக்கூடிய முதலமைச்சர். அவருடைய அறிவுரையின் படி, இந்தத் தேர்தல் அறிக்கை குழு பல மாவட்டங்களுக்கு சென்று, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களுடைய கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் எண்ணங்களை ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கையாக உருவாக்க இருக்கிறோம்.

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில், பல்வேறு அமைப்புகளிலிருந்து வந்த மீனவ சமூகத்தினர் மட்டுமின்றி, சில விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில மத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் எங்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். நிச்சயமாக அந்தக் கருத்துகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, எது தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதற்கு சாத்தியமோ அதை எல்லாம் நிச்சயமாக அதில் இடம்பெறும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு, சில பகுதிகளில் அடிப்படை தேவைகள் தொடர்பான குறைபாடுகள் உள்ளதாகவும், குறிப்பாக மீனவர்களின் பிரச்சனைகள் மிகப்பெரும் அளவில் பிரச்சனைகளை குறித்து சொன்னார்கள்.
இந்த ஆட்சியில் எவ்வளவு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்ற கேள்விக்கு; இதைப் பற்றி முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊடகத்தோடு இரண்டு அமைச்சர்கள் அமர்ந்து, அதுக்கான ஒரு பிரஸ் மீட்டும் கொடுத்து உள்ளார்கள். இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட தேர்தல் அறிக்கையில் 505யில் 400க்கு மேல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில வாக்குறுதிகள், ஒன்றிய அரசாங்கம் நமக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அதை நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது. சில வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளது. முக்கியமாக பெண்கள் மற்றும் மாணவர்களுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக முன்னிலைப்படுத்தப்படும்.

தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற கேள்விக்கு, அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தக்கூடிய ஒரு நேரம் இந்த நேரம். அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரை நேரில் அழைத்து பேசித் தீர்வு காண்கிறோம். பல ஆண்டுகளாக தீர்வு காண முடியாத பல விஷயங்களுக்கு முதலமைச்சர் தீர்வு கண்டுள்ளார்.
திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக , தனி நபர்கள் கூறும் கருத்துகளுக்கு கட்சி பதிலளிக்க முடியாது. திமுக மற்றும் காங்கிரஸ் தலைமைகளுக்கு இடையில் இணக்கமான நல்லுறவு நிலவுகிறது; கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் குழுவும் நிச்சயமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்,.







