கோவில்பட்டியில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை திரும்ப ஒப்படைத்த ரேஷன் கடை ஊழியர்
Oplus_16908288
கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் நேற்று ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக ஜோதி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார்.
கடைக்கு செல்லும் போது ஒரு தங்கச் செயின், இரண்டு தங்ஙவளையல்கள் என 5பவுன் தங்க நகைகளை ஒரு பையில் வைத்து இருந்தார். ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நகை வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்துள்ளார். இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். லட்சுமி பொருட்கள் வாங்கிய ரேஷன் கடைக்கு சென்று தலைமைக் காவலர் கழகாசலமூர்த்தி விசாரித்த போது , அந்த ரேஷன் கடையில் பணியாற்றி வரும் கயத்தார் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனி பாண்டியன், லட்சுமி தவறவிட்டுச் சென்ற நகைகள் அடங்கிய பையை தொலைத்தவர் தேடி வந்தால் கொடுக்கலாம் என்று எடுத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
மேலும் யாரும் கேட்டு வரவில்லை என்பதால் இன்று காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலையில் தவறவிட்ட தங்க நகைகள் லட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நகை பையை பத்திரமாக எடுத்து வைத்திருந்த ரேஷன் கடை ஊழியருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.







