தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதி விபத்து; 3 பயிற்சி டாக்டர்கள் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் படித்து பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருவர்களில் கோயம்புத்தூர், பிஎன் புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேர் இன்று அதிகாலை 3 மணி அளவில் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர்.

காரை சாருபன் ஓட்டினார். கார் பீச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்ததால் ரோடு தெரியாத நிலையில், சாருபன் ஓட்டிச்சென்ற கார் நிலை சாலையோர வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது.இதில் 5பேரும் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்
இது குறித்து அந்த வழியாக சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று காருக்குள் சிக்கிய 5பேரையும் மீட்டனர். இதில் சாரூபன், ராகுல் ஜெபஸ்தியான், முகிலன் ஆகிய 3பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த கிறிஸ்டி குமார், சரண் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் டவுன் ஏஎஸ்பி மதன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனையில் ஏராளமான பயிற்சி டாக்டர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் குவிந்தனர்.தூத்துக்குடியில் கார் விபத்தில் 3 பயிற்சி டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுது.
விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.







