• May 14, 2025

கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி

 கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி முத்துக்கருப்பி. இருவரும்  கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு  2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, அந்த சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்ததை எண்ணிப்பார்த்து தெரிந்துகொண்ட அவர் மீண்டும் அந்த உண்டியலை புதைத்து வைத்துள்ளார். அதன்பிறகு பெய்த மழையின் காரணமாக, அந்த தகர உண்டியலுக்குள் கரையான்கள் புகுந்து ரூபாய் நோட்டுக்களை அரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு அந்த தகர உண்டியலை முத்துக்கருப்பி திறந்து பார்த்தபோது, அந்த பெட்டியில் இருந்து சேமிப்பு பணம் முழுவதையும் கரையான்கள் அரித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கரையான் அரித்த ரூபாய் நோட்டுக்களுடன் தனது குழந்தைகளுடன் முத்துக்கருப்பி, அழுது புலம்பிய  காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், கரையான் அரித்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றித் தருவதற்கான பரிந்துரைகளை வங்கி மூலம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், பாதிக்கப்பட்ட குமார் – முத்துக்கருப்பி தம்பதியை சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து, ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த காணொளியை அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்ட அந்த தம்பதி, கண்ணீர் மல்க ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இக்காணொளியை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு, நடிகர் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *