• May 19, 2025

திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் – ராகு கேது பரிகார தலம்

 திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் – ராகு கேது பரிகார தலம்

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்பரம் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்,.

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

இக்கோவில் வரலாற்றை காண்போம்…

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார்.

அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல்பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிறங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ராகு – கேது தோஷம் நீக்கும் கோவில்: திருப்பாம்புரம் ஒரு ராகு – கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம்.

ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகிவிடுகின்றன. மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராட்ச  மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.

திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்புகள் கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்ற் சம்பந்தர் தனது பதிகத்தில் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

இக்கோவில்  காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 – 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மாலை 5 மணிக்கு மேல் பரிகார பூஜை கிடையாது.

நேர்த்திக்கடனாக சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *