ராமேஸ்வரம் தீர்த்தங்களில் நீராடுவது ஏன்? பலன்கள் என்னென்ன?

இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ராமேஸ்வம் ஒன்றாகும். வடக்கில் காசி, கயாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தங்களின் பாவங்கள் தீரவும், பித்ரு கடன் செலுத்தவும் அதிகம் வரும் தலம் என்றால் அது தெற்கில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தான்.
கடற்கரையில் அமைந்த சிவன் கோவில் இதுவாகும். ராமேஸ்வரம் என்றாலே புனித நீராடுவது தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். பாவங்களை போக்கி, முக்தியை தரும் முக்தி தலமாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
ராமாயணத்தில் தனது மனைவி சீதையை கடத்திச் சென்ற ராவணனிடம் இருந்து சீதையை மீட்க வருகிறார் ராமன். ராவணனுடன் போர் புரிந்து, அவனை வதம் செய்து, சீதையை மீட்கிறார். மிகப் பெரிய சிவ பக்தனான ராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொள்வதற்காக மணலில் லிங்கம் பிடித்து வழிபடுகிறார் ராமன்.
ராமன், ஈஸ்வரனை வழிபட்டு, பாவ நிவர்த்தி பெற்ற தலம் என்பதால் இந்த தலம் ராம ஈஸ்வரம் ஆனது. இங்குள்ள சிவனும் ராமநாதர் என அழைக்கப்படுகிறார். இங்கு வந்து புனித நீராடி, இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என ராமேஸ்வர தல புராணம் சொல்கிறது. இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் அனைத்து புனித நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.

ராமேஸ்வரத்தில் உள்ள கடலுக்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். வேறு எந்த கடலுக்கும் இப்படி ஒரு சிறப்பு கிடையாது. இது தவிர ராமநாத சுவாமி ஆலயத்திற்குள் 22 வற்றாத கிணறுகள் உள்ளன. இவற்றை தீர்த்தங்கள் என அழைக்கின்றனர்.
ராமேஸ்வரம் சென்றால் இந்த 22 தீர்த்தங்களிலும் கண்டிப்பாக நீராடினால் மட்டுமே ராமேஸ்வரம் சென்ற முழு பலனும் கிடைக்கும். இந்த 22 தீர்த்தங்கள் மற்றும் அவற்றின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவற்றில் எந்த தீர்த்தத்தில் நீராடினால் என்ன பலன் கிடைக்கும் என பலருக்கும் தெரியாது. அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1. மகாலட்சுமி தீர்த்தம் – சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
2. சாவித்ரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4.சரஸ்வதி தீர்த்தம் – பிதுர் கடன் செய்ய மறந்த பாவம் விலகி, சந்ததி இல்லாதவர்களுக்கும் முக்தி பெறுவார்கள்.
5. சேது மாதவ தீர்த்தம் – லட்சுமி கடாட்சம், வெற்றிகள் உண்டாகும்.
6. நள தீர்த்தம் – கடவுளின் அருள் கிடைத்து, சொர்க்கலோக பதவி கிடைக்கும்.
7. நீல தீர்த்தம் – யாகம் செய்த பலனும், சொர்க்கமும் கிடைக்கும்.
8. கவாய தீர்த்தம் – ஆரோக்கியம் கிடைக்கும்.
9. கவாட்ச தீர்த்தம் – மன வலிமை, ஆரோக்கியம், பலமான உடல் கிடைக்கும், நரகத்திற்கு செல்ல மாட்டார்கள்.
10. கந்நமாதன தீர்த்தம் – தரித்திரம் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும், பிரம்ம ஹத்தி போன்ற பாவங்கள் நீங்கும்.
11. சங்கு தீர்த்தம் – செய்நன்றி மறந்த சாபம் நீங்கும்.
12. சக்கர தீர்த்தம் – உடல் குறைபாடுகள் நீங்கும்

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம், பாவ நிவர்த்தி ஏற்படுவதுடன் பில்லி சூனியம் நீங்கும்.
14. சூர்ய தீர்த்தம் – மூன்று காலத்தை உணரும் ஞானம் கிடைக்கும், நோய்கள் குணமாகும்.
15. சந்திர தீர்த்தம் – நோய்கள் நீங்கும்.
16.கங்கா தீர்த்தம், 17.யமுனா தீர்த்தம், 18.காயத்ரி தீர்த்தம் – பிணி, மூப்பு, சாக்காடு ஆகியனவும், அஞ்ஞானமும் நீங்கி, முக்தி கிடைக்கும்.
19. சாத்யாம்ருத தீர்த்தம் – பிராமண சாபம், மோட்சம் கிடைக்கும்.
20. சிவ தீர்த்தம் – சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
21. சர்வ தீர்த்தம் – பிறவி குறைபாடுகள் நீங்கும்.
22. கோடி தீர்த்தம் – இந்த தீர்த்தம் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக ராமர் தனது அம்பினால் உருவாக்கிய தீர்த்தம் ஆகும்.
இந்த தீர்த்த நீரே ராமநாத சுவாமி, அம்பாள் மற்றும் பிற தெய்வங்களுக்கு அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் சிவனின் அருளும், ராமரின் அருளும் பெற்று பெருவாழ்வு கிடைக்கும்.
