வீட்டில் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்தல்

நாம் வீடுகளுக்குத் தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது சிறிய மளிகைக் கடைகளில் வாங்கிவருவோம். அங்கு உணவுப் பொருட்களையும், உணவற்ற பொருட்களையும் தனித்தனியாக வைத்திருப்பதை நாம் கவனித்திருப்போம்.
அதற்கான காரணம், உணவற்றப் பொருட்களால், உணவுப் பொருட்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது என்பதால் மட்டும் அல்ல. கவனக்குறைவாக, உணவற்ற பொருளை உணவுப் பொருளாக நாம் பயன்படுத்திவிடக்கூடாது என்பதும் ஒரு கூடுதல் காரணம். எனவே, நுகர்வோர்களாகிய நாம், கீழே குறிப்பிட்டுள்ளவைகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.
1. கடையில்/டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸில் மளிகை சாமான்களை வாங்கிவர இரண்டு பைகளை எடுத்துச் சென்று, உணவுப் பொருட்களை ஒரு பையிலும், சோப், கிளீனிங் பொருட்கள் உள்ளிட்ட உணவற்ற பொருட்களை மற்றொரு பையிலும் வாங்கிவர வேண்டும்.
2. வீட்டிற்கு வந்ததும், பொட்டலமிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் லேபிளில் குறிப்பிட்டுள்ளபடி தகுந்த வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். (உ.ம்: பால், வெண்ணெய், ஆகியவற்றை குளிர்சாதனப் பெட்டியில் “Cold Compartment”-ல் பாதுகாக்க வேண்டும்.).
3. அறைவெப்பநிலையில் (Room Temperature) வைக்கவேண்டிய வெங்காயம், பூண்டு, பருப்பு வகைகள், மசாலா வகைகள் போன்ற உணவுப் பொருட்களை தரையிலும், சுவற்றிலும் படாதவாறு இருப்பு வைக்க வேண்டும்.
4. உணவற்ற பொருட்களான, சோப், பேஸ்ட், கிளீனிங்பொருட்கள் உள்ளிட்டவற்றை, தனியான ஒரு இடத்தில், குழந்தைகளுக்கு எட்டாவண்ணம் வைக்க வேண்டும். (இடப்பற்றாக்குறை இருப்பின், ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம்)
5. கிருமித்தொற்றினைத் தடுக்க (to prevent cross contamination), குளிர்சாதனப் பெட்டியில் கூடுமானவரை சைவ, அசைவப் பொருட்களை பக்கத்தில் தொட்டுக்கொள்ளும்படி இல்லாமல், தனித்தனி பாத்திரங்கள்/ஏற்ற கொள்கலன்களில் வைத்து, பாதுகாக்க வேண்டும். அதாவது, சமைக்கப்படாத சிக்கன், மீன் போன்ற இறைச்சி வகைகளை தனித்தனிப் பாத்திரங்கள்/பாக்ஸில் வைத்து இறுக்கமாக காற்றுப்புகாவண்ணம் மூடி, “Deep Freezer”-ல் வைக்க வேண்டும். அதே பகுதியில் ஐஸ் கிரீம் வைப்பதானால், தனியாக ஒரு சின்ன பாக்ஸில் வைத்து, இறைச்சி உள்ள பாத்திரத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளிவிட்டு வைக்கவேண்டும்.
6. உணவுப் பொட்டலங்களின் காலாவதி தேதியைக் கவனித்து, சீக்கிரமாக காலாவதியாகும் உணவுப் பொருட்களை, அதன் காலாவதி தேதிக்கு முன்னரே பயன்படுத்தும் வகையில் அடுக்கிவைக்க வேண்டும். (உ.ம்: பிரட், மாவு வகைகள் மிகக் குறுகிய காலாவதி தேதி கொண்டவை.)
டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,
நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,
தூத்துக்குடி மாவட்டம்.
