• May 14, 2025

சொள்ளமாடன் பாத்துக்குவான்… (சிறுகதை)

 சொள்ளமாடன் பாத்துக்குவான்… (சிறுகதை)

மாதவன்-மாதவிக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது…
நாலைந்து கிலோமீட்டர் தொலைவில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம், இயற்கை சூழ்ந்த பகுதிக்கு தன் புது மனைவியை அழைத்துச் சென்றிருந்தான்.
மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கச் சென்ற அந்த தம்பதிக்கு இப்படி ஒரு நிலைமையா?
பட்டுச்சேலை பரபரக்க… கறுப்பு கொடியில் மல்லிகை படர்ந்திருக்க..  கொடி நுனியில் ரோஜா பூத்திருக்க.. கண்ணாடி வளையல்கள் மங்கல ஒலி எழுப்ப..
மஞ்சள் முகம் காலை வெயிலை மிஞ்சும் அழகுடன்  அழைத்துச் சென்ற மாதவியின் இப்போதைய நிலை பரிதாபத்துக்குரியது.
இரண்டு பாறைகளுக்கு இடையே சிறிய பரப்பளவில் இருந்த புல்வெளி.. இப்போது களங்கப்பட்ட இடமாய் காட்சி அளிக்கிறது.
கட்டுக்குள்  அடங்கி இருந்த மலர்கள் சிதறி, சிதைந்து கிடந்தன. வளையல்கள் அவள் கைகளை பதம்பார்த்துவிட்டு நொறுங்கிக் கிடந்தன. மங்களகரமாய் காட்சி தந்த மஞ்சள் முகம் மாலை சூரியனாய் சிவந்திருந்தது.
கசங்கி கிடந்தது பட்டு சேலை மட்டுமல்ல… அவளது மேனியும்தான்…
மயக்கம் தெளிந்து கண்விழித்தபோது… மாதவன் ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தான். அவன் முகத்திலும் ரத்த கோரைகள். அவன் இன்னும் தன்நினைவுக்கு வரவில்லை.
மெதுவாக எழுந்து சேலையை சரிசெய்து கொண்டு கணவரை மரத்தில் இருந்து மீட்டாள், மாதவி…
அருகில் உள்ள ஓடைத் தண்ணீரில் வடுவை ஓரளவு கரைத்தனர்.  
“மாதவி என்னை மன்னிச்சிடு… ஒரு ஆம்பளயா இருந்தும் உன்னை என்னால காப்பாத்த முடியல…”
“பாதுகாப்பு இல்லாத இந்த இடத்துக்கு என்ன எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க…”
“இந்த படுபாவி பக்கத்து ஊருக்காரன் முரடன் மூக்கன். பொம்ள பொறுக்கி… இங்க எப்டி வந்தான். ஆனாலும் உன்னைக் காப்பாத்த முடியல…”
“பாதகம் நடந்த இடத்தைப் பார்த்து ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினாள்.”
“மாதவி..
அழாதே…”
“என்ன இருந்தாலும் நான்… பழுதுபட்டவா தானே…”
“மேனி பழுதானாலும் உன் மனசு என்னைக்குமே உருகாத தங்கம்தானே…  சரி  இங்கே நடந்ததை அடியோட மறந்துடு… வா… போகலாம்…”
மலையடிவாரத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் புறப்பட்டனர். வரும்போது உற்சாசமாக காணப்பட்ட மாதவி இப்போது தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள்.
வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது தோளில் மண்வெட்டியுடன் வந்த ராமசாமி ஒரு நிமிடம் இவர்களை பார்த்தான்.
“என்னப்பா மாதவா… இந்தக் காடு உங்களுக்கு வீடாயிட்டா…” என்று நமட்டு சிரிப்புடன் சென்றான்.
“மாதவி.,. இந்த ராமசாமி நினைச்சதே.. ஊரும் நினைக்கட்டும்”
“இல்லங்க.. என்னை நாசமாக்கினவன சும்மாவிட மாட்டேன்.. அவன் இந்த உலகத்துல இருந்தா இன்னும் எத்தன பேர சீரழிப்பானோ… இதுக்காக நா கேவலப்பட்டாக்கூட பராவாயில்ல..
ஆனா நீங்க…”
“உன்ன களங்கம் நினைச்சேன்னா நான் ஒரு ஆம்பளயே இல்ல”
“நேரே எஸ்.பி. வீட்டுக்கு வண்டிய விடுங்க.”
“ஆமா நல்ல மனுசன்னு கேள்விப்பட்டேன். இருக்கவன் இல்லாதவன்னு பாக்கமாட்டாராம்.”
ஐந்து நிடத்தில் அங்கே..
நல்லவேளையாக கேட் அருகே நின்று கொண்டிருந்தார் போலீஸ் சூப்பிரண்டு.
“சார்…”
“என்ன, உங்களுக்கு என்ன வேணும்?”
நடந்ததை சொல்லி முடித்தார்கள்
“ஏம்மா இதயெல்லாம் வெக்கம் இல்லாம புகார் செய்ய வந்துட்டியே… போம்மா குளிச்சிட்டு எதுவும் நடக்காதது மாதிரி இருங்க.. இது ஊரு உலகத்தில தெரிஞ்சா உன்னத்தான் தப்பா நினைப்பாங்க. (மாதவனைப் பார்த்து) இந்த பய… உன்ன ஏதாது சொன்னானா? ஏம்பா உம் பொண்டாட்டிய ஒண்ணும் சொல்லாம ஒழுங்கா குடும்பம் நடத்து.. போங்க… போங்க…”
“சார் நீங்க நேர்மயான எஸ்.பி.ன்னு சொன்னாங்க… இருக்கவன்.. இல்லாதவன்னு பாக்க மாட்டீங்கன்னு சொன்னாங்க… அதான் வந்தோம்…”
“இங்க பாரு.. நான் இருக்கிறவன் இல்லாதவன்னு பார்க்க மாட்டேன்தான். ஆனால் சொந்தக்காரனா அந்நியனான்னு பார்ப்பேன். உன்ன கெடுத்தவன் எனக்கு தூரத்து சொந்தம்… இத்தோட அத மறந்துடு… எனக்கும் மேலதிகாரிக்கிட்ட போன….”
 –புருவத்தை மேலே தூக்கி பார்த்து மிரட்டினார்…. அந்த அதிகாரி…
ஊருக்கு சென்றதும் இருவரும் குளித்துவிட்டு அருகில் உள்ள சுடலை மாடன் கோவிலுக்குச் சென்றனர்.
“மாதவி… நடந்தத மறந்துடு… இத வேற யாருக்கிட்டயும் சொல்லாத.. எல்லாத்தையும் இந்த சொள்ளமாடன் பாத்துக்குவான்.”
சாமி முன்னால் இருந்த திருநீறை எடுத்து தானும் பூசிக்கிட்டு மனைவிக்கும் பூசினான். அடுத்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் பதித்தான்.
மறுநாள் காலையில்… மாதவி பேப்பரை பார்த்தபோது அதிர்ந்து போனாள்..
“போலீஸ் சூப்பிரண்டை அரிவாளால் வெட்டிய கொள்ளையன் மீது என்கவுன்ட்டர்” என்று தலைப்பு செய்தியாக பிரசுரமாகி இருந்தது. மூக்கன் குண்டு பாய்ந்து பிணமாகக் கிடந்த படமும் போலீஸ் சூப்பிரண்டு கையில் கட்டுடன் இருப்பது போன்ற படமும் அந்த நாளிதழில் இடம் பெற்று இருந்தது.
உடனே கணவனை அழைத்து காட்டினாள்.
“மாதவி இவன் கொஞ்சம் பணம் உள்ளவன். கொள்ளை, திருட்டுல்லாம் இவங்கிட்ட கிடயாது… ஆனா பொம்பளங்கத்தான் குறி…”
“அப்படின்னா… இந்த காரியத்த நமக்காத்தான் அந்த எஸ்.பி. செஞ்சிருப்பாரு   போல.. புறப்படுங்க…”
அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் சூப்பிரண்டு வீட்டிற்கு சென்று இறங்கினார்கள். அங்கே போலீசார் சூழ கையில் கட்டுடன் சூப்பிரண்டு நின்று கொண்டிருந்தார்.
போலீசாரின் அனுமதி இன்றி மாதவி அங்கே நுழைந்து…
“சார்…”  என்றாள். அவள் விழிகள் ஆனந்த கண்ணீரை வெளிக்கொண்டுவர முயற்சித்தன.
“யாரும்மா நீ…. டேய் இவள யாருடா உள்ள விட்டா?”
“ஐயா உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்குமோன்னு நினைச்சோம்” ஒரு போலீஸ்காரர் பயந்து பயந்து சொன்னார்.
அடுத்த நொடியில் மாதவி வெளியே தள்ளப்பட்டாள்.
சற்று தொலையில் நின்று கொண்டு போலீஸ் சூப்பிரண்டை பார்த்தாள். அங்கே அவர் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. சொள்ளமாடன்தான் தெரிந்தார்.

  • கடையம் பாலன்
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *