மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் 16-ந்தேதி நடக்கிறது; ஆட்சியர் கோ.லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 27 கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நிதியாண்டில் 311 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.140.34 லட்சம் கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ 500.00 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 31.07.2024 வரை 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
இக்கடன்கள் சிறுவணிகம், தொழில் அபிவிருத்தி, சுயதொழில் மற்றும் கைத்தொழில் செய்வதற்காக வழங்கப்படுகிறது. மேலும், இக்கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையினை தவணைத் தேதிக்குள் திரும்ப செலுத்தும்பட்சத்தில் வட்டி கிடையாது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 16.8.2024-ம் தேதி காலை 10மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார்கள்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இம்முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் விண்ணப்பித்து, தகுதியின் அடிப்படையில் தொழில் அபிவிருத்திக்கு கடன் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக் கொண்டுள்ளார்.
