ஒரேநாள் இரவில் 4 கடைகளில் கைவரிசை: அப்பனேரி ஆர்.வி.எஸ்.ஸ்டோர்சில் இரும்பு கதவை உடைத்து ரூ.97 ஆயிரம் கொள்ளை
கோவில்பட்டி அப்பனேரி வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் பகுதி ஆகும். ஜி.வி.என்.கல்லூரி ரோட்டில் நிறைய கடைகள் உள்ளன. ஆர்.வி.எஸ்.ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. கடைக்கு வெளியே இரும்பு ஷட்டர் கதவு உள்ளது. அதற்கு வெளியே உள்ள தளத்தில் காய்கறி மற்றும் பல்வேறு பொருட்கள் உள்ளன. இவற்றுக்கு வெளியே தகர கதவு போடப்பட்டு இருக்கிறது.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உரிமையாளர் ராமமூர்த்தி அருகில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 5 மணி அளவில் மார்க்கெட் புறப்பட்டார். அப்போது கடைக்கு வந்த போது வெளிப்புற தகர கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்ற போது டியூப் லைட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். மேலும் இரும்பு ஷட்டர் கதவின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இன்னொரு பூட்டை உடைக்காமல் இரும்பு கம்பியால் கதவை நெம்பி உடைத்து ஒரு ஆள் உள்ளே செல்லும் வகையில் காணப்பட்டது.

கடையில் கொள்ளை நடந்து இருப்பதை உணர்ந்த ராமமூர்த்தி மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் போலீசார் நேரில் வந்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்,
கொள்ளையர்கள் கடையில் இருந்து ரூ,97 ஆயிரம் கொள்ளையடித்து சென்று உள்ளனர், மேலும் சி.சி.டி.வி.கேமரா பவர் யூனிட்டை எதுவும் செய்யாமல் டி.வி.ஆர்.பாக்சை மட்டும் எடுத்து சென்று விட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எதுவும் சிக்குமா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்படி எந்த தடயமும் கிடைக்கவில்லை. கொள்ளையர்கள் கைகளில் கிளவுஸ் அணிந்து வந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கடையை நன்கு நோட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தி இருக்கிறார்கள்.
கொள்ளை நடந்தது பற்றி கடை உரிமையாளர் ராமமூர்த்தி கூறுகையில், “வழக்கமாக கடையில் பணம் வைக்க மாட்டேன், காலையில் பருப்பு வியாபாரிக்கு பணம் தரவேண்டி இருந்ததால் வைத்து இருந்தேன். இதில் ரூ.40 ஆயிரம் அளவுக்கு 5,10 ரூபாய் நாணயங்களாக இருந்தன” என்றார்.
நேற்று இரவில் மேலும் 3 கடைகளில் கொள்ளை நடந்து இருக்கிறது. மேலப்பட்டி விலக்கில் ஒரு ஜவுளி கடையில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் திருட்டு போயின. அருகில் இருக்கும் எலக்ட்ரிகல் மற்றும் உரக்கடை ஆகியவற்றில் கதவு உடைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளே பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.
இந்த 4 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? அல்லது வெவ்வேறு நபர்களா? என்பது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







