பிடிவாத போக்கை கைவிட்டு போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு, அமைப்பு செயலாளாரும்,முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை கழக நிர்வாகிகள் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் பாகம் மாறி பெயர் இடம் பெறுவது, இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் என இரட்டை வாக்காளர்கள் அதிகம் இடம்பெறுவது போன்ற தொடர் குளறுபடிகளுக்கு கழகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் பொதுச்செயலாளர் அறிவுறுத்தினார்.
ஜனவரி 17ம் தேதி புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கழகத்தின் சாதனைகளை பொதுக் கூட்டங்கள் மூலம் எடுத்து சொல்லியும் கொண்டாட வேண்டும் என பொதுச் செயலாளர் அறிவுறுத்தினார்.
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளதை அடுத்து, தமிழகம் போராட்ட களமாகவும், போராட்ட பூமியாகவும் மாறி உள்ளது.இதை தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று பொதுக்கூட்டங்களை நடத்தி பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் போக்குவரத்து துறை தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அவர்களை தட்டு ஏந்தியும், கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கும் திமுக அரசு கொண்டு வந்து விட்டது. கருணாநிதி பெயர் வைப்பதற்கும், பேனா நினைவு சின்னம் வைப்பதற்கும், கார் பந்தயம் நடத்துவதற்கும் கருவூலத்தில் பணத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு நிதியை செலவிட மனம் இல்லையா?
திமுகவின் ஒரு குடும்பத்தின் கருவூலத்துக்கே அரசின் வரி வருவாய் அனைத்தும் சென்று விடுவதால், அரசாங்க கருவூலத்தில் பணம் இல்லாமல் இருக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்டதாக சொல்லப்படும் முதலீடு நடைமுறைக்கு சாத்தியமில்லை,ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது. 3.5 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்ப முடியாத திமுக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாக சொல்வது நடக்காத காரியம்.
கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்த நிலையில் வெறும் 899 பேர் மட்டுமே வந்தனர். இதன் மூலம் கருணாநிதியை அவரது மகன் பங்கப்படுத்திவிட்டார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் போட்ட பிச்சையால் தான் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார்.
தமிழகத்தில் தற்போது 10 விழுக்காடு பேருந்துகளே இயங்குகிறது. பிடிவாத போக்கை கைவிட்டு போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இந்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.







