• May 20, 2024

பழமாகி காயாகும் மரம்… (சிறுகதை)

 பழமாகி காயாகும் மரம்… (சிறுகதை)

 சின்ன குழந்தைகளுக்கு ஒரு பாட்டி தினமும் பல புதிர் கதைகளை  சொல்லிவந்தார்.

அன்று மாலையில் பாட்டியை சுற்றி சின்ன குழந்தைகள் இருந்தனர்.பாட்டி புதிர்கதைகள் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.

அந்த குழந்தைகளை பார்த்த பாட்டி என்ன குழந்தைகளா…புதிர் கதை சொல்லட்டுமா என்க ..குழந்தைகள் ஓ..சொல்லுங்க பாட்டி என்றனர்..

பாட்டி கதை சொல்ல தொடங்கினார்.

ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார்.அவரிடம் தினந்தோறும் ஏராளமானபேர் வந்து ஆசி பெற்று சென்றனர்.

அப்போது ஒருவர் சாமியாரிடம் வந்து..சாமி…எனக்கு வாழ்க்கையிலே ஒரே துன்பமாக இருக்கு..இந்த துன்பம் போக என்ன செய்யலாம் என்று கேட்டார்.

அதற்கு சாமியார் அவரிடம் உனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். அவர் இல்லை என்றார்.

சாமியார் சிரித்தபடி ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டார். அவர்..இருக்கிற துன்பம் போதாதா..அதுவேற வேணுமா என்றார்.

உடனே சாமியார் அவரிடம்..உங்களுக்கு ஒரு புதிர் போடுகிறேன்..அந்த புதிருக்கு பதில் சொல்லுங்கள்.துன்பம் போக உங்களுக்கு என்ன வழி என்று தெரியும் என்றார்.

அவர்..சீக்கிரம் சொல்லுங்கள்..நான் அந்த புதிருக்கு விடை சொல்கிறேன் என்றார். சாமியார் அவரிடம்..புதிரை சொன்னார்.

.ஒவ்வொரு மரமும் பூக்கும்.பிறகு காய்க்கும்.அந்த காய் பின்னர் பழமாகும்.பழமான பின் நாம் பறித்து சாப்பிடுவோம்.ஆனால் ஒருமரத்தின் மட்டும் காய் காய்க்கும்.அந்த காய் பழமாக பழுக்கும்.பின்னர் அது மீண்டும் காயாகும்.அது என்ன  மரம் என்று கேட்டார்.

அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு தெரியலை என்றார்.

சாமியார் அவரிடம் இந்த புதிருக்கு விடை கண்டு பிடித்துவிட்டு மீண்டும் வாங்க என்று அவரை அனுப்பிவைத்தார்.

அவர் பல நாள் யோசித்தார்.அவருக்கு விடை கிடைக்கவில்லை.என்ன துன்பம் போகவழி கேட்டா சாமியார் நம்மிடம் ஒரு புதிர்போட்டு விட்டுவிட்டார்.இதற்கு விடை கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கே என்று புலம்பிக்கொண்டே திரிந்தார்.

அந்த புதிருக்கு அவர் விடை கண்டுபிடிக்கவே இல்லை.அதற்காக மற்றவர்களிடமும் யோசனையும் கேட்கவில்லை.

குழந்தைகளே உங்களுக்கு பழமாகி காயாகும் மரம் பெயர் தெரியுமா என்று பாட்டி கேட்டார்.: குழந்தைகள் யோசிக்கத்தொடங்கினார்கள். பழமாகி காயாகும் மரம் எது என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்.சரியான விடையை கண்டுபிடிக்கமுடியவில்லை.ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்தனர்.

ஒரு குழந்தை..எழுந்து  தென்னை மரம் என்றது.பாட்டி இல்லை என்றார்.மற்றொரு குழந்தை ..மெல்ல மாமரம் என்று சொல்லியது.பாட்டி அது தவறான பதில் என்றார்.அப்படின்னா என்ன என்று குழந்தைகள் கூடி ஆலோசித்தனர்.

.ஒவ்வொரு மரத்தின் பெயராக சொல்லிப்பார்த்தனர்.எதுவுமே சிக்கவில்லை.குழந்தைகள் அந்த பாட்டியிடம்..கொஞ்சம் குறிப்பா சொல்லமுடியுமா என்று கேட்டன.

.அதற்கு  பாட்டி மெதுவாக..அந்த காயை நாம சாப்பிடும்போது பயன்படுத்துவோம் என்றார்

.குழந்தைகள் அந்த குறிப்பை வைத்துக்கொண்டு சாப்பிடும்போது என்னகாயை பயன்படுத்துவோம் என்று ஒவ்வொரு காயாக சொல்லிப்பார்த்தார்கள்.அந்த காய் உரைக்குமா..கசக்குமா என்று கேட்டனர்.

பாட்டி..அதுவா..அதைச்சொன்னா கண்டுபிடிச்சிடுவீங்க..அது உரைக்கும்..என்று சொன்னார்.அவ்வளவுதான் ஒரு குழந்தை அந்த குறிப்பைவைத்து அது என்னகாய் என்று கண்டுபிடித்துவிட்டது.

பாட்டி எனக்கு தெரியும்..சொல்லட்டுமா என்றது.

சரி..சொல்லுபார்ப்போம் என்றார் பாட்டி.உடனே அந்த குழந்தை எலுமிச்சைஊறுகாய் என்று பதில் அளித்தது.

அது எப்படி என்று பாட்டி கேட்டார்.அதற்கு அந்த குழந்தை..அதுவா பாட்டி…எலுமிச்சை மரத்தில் காய் காய்க்கும்.பின்னர் அது பழமாகும்.அந்த பழத்தை வெட்டி  சட்டியில் போட்டுஉப்பு போட்டு மசாலா சேர்த்து ஊறுகாய் தயார் செய்வோம்.இப்போ  தெரியுதா..காயாக இருந்த எலுமிச்சை பழமாகி மீண்டும் காயாகி..அதாவது ஊறுகாயாகிவிடுகிறது என்றது.

பாட்டி அந்த குழந்தையின் திறமையை பாராட்டி ஐந்து மிட்டாய் கொடுத்தார்.அந்த குழந்தை மற்ற குழந்தைகளுக்கு அந்த மிட்டாயை பகிர்ந்து கொடுத்து தானும் சாப்பிட்டு சிரித்தது.

இந்த கதைமூலமாக என்ன தெரிகிறது..எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு தீர்வு காணமுயற்சி செய்யவேண்டும்.பிரச்சினையை கண்டு பயந்து ஓதுங்கக் கூடாது  என்று பாட்டி சொன்னார்.குழந்தைகளும் சரிபாட்டி என்று புன்னகைத்தனர்.

வே.தபசுக்குமார்..முள்ளன்விளை.தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *