• May 20, 2024

காக்கைகளின் உண்ணாவிரதம்…(சிறுகதை)

 காக்கைகளின் உண்ணாவிரதம்…(சிறுகதை)

அன்று காலை பாட்டி மகிழ்ச்சியாக இருந்தார்..குழந்தைகள் பாட்டி முன் அமர்ந்திருந்தனர்…பாட்டி கதை சொல்லுங்கள் பாட்டி என்று குழந்தைகள்  கேட்டனர்.

அப்படியா .நான் இன்னைக்கு  காக்கை  கதை சொல்லப்போறேன் என்றார் பாட்டி…

ஓ..காக்கா கதையா அது பழைய கதையா..அது வேண்டாம் என்றன குழந்தைகள்.

அதற்கு பாட்டி சிரித்துக்கொண்டே ..குழந்தைகளே..இது பழைய கதை இல்லை..பழைய கதையிலே ஒரு புதிர்கதை..கேட்கிறீங்களா என்று கேட்டார்.

உடனே குழந்தைகள் என்ன புதிர்கதையா..ரொம்ப கஷ்டமான புதிரா..என்று  கேட்டனர்.

இல்லை..இல்லை..எளிமையான புதிர்தான்..ரொம்ப சிரிப்பா இருக்கும்..சொல்லட்டுமா என்று பாட்டி கேட்டார்.

சிரிப்பா இருக்குமா..அப்போ சொல்லுங்க பாட்டி என்று குழந்தைகள் ஆர்வமானார்கள்.

உடனே பாட்டி..குழந்தைகளா நான் புதிர் சொல்வேன்..யார் முதலில் பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு பரிசு..என்று அவர்களை உற்சாகமூட்டினார்.

சரி பாட்டி..முதலில் புதிரை சொல்லுங்க..என்று குழந்தைகள்  புதிர் கதை கேட்க தயாரானார்கள்.பாட்டி கதை சொல்ல தொடங்கினார்.

ஒரு ஊரிலே ஒரு பாட்டி இருந்தார்.அந்த பாட்டி தினமும் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து வடை சுட்டு விற்றுவந்தார்.அந்த பகுதியில் உள்ளவர்கள் பாட்டியிடம் காசு கொடுத்து வடைவாங்கி சென்றனர்.

பாட்டியும் வடைவிற்று தன் வாழ்க்கையை ஓட்டிவந்தார்.ஆனால் அந்த மரத்தில் வந்து அமரும் காக்கைகள் பாட்டி அங்கே இங்கே திரும்பும்போது வடையை கவ்விச்சென்றன.பாட்டி கம்பை எடுத்து அந்த காக்கைகளை விரட்டுவார்.ஆனால் பறப்பதுபோல் பறக்கும்.மீண்டும் அதே மரத்தில்வந்து அமர்ந்து வடைகளை தூக்கிச்சென்றன.

ஒருவாரமாக காக்கைகள் வடைகளை தூக்கிச்சென்று மரத்தில் அமர்ந்து கொத்தி கொத்தி தின்றன.பாட்டி எவ்வளவு விரட்டியும் காக்கைகள் கேட்கவில்லை.சரி..இந்த காக்கைகள் கேட்காது..விரட்டிபயன் இல்லை என்று மனம் சோர்ந்துவிட்டார்.காக்கைகளை விரட்டுவதை விட்டுவிட்டார்.

அதைப்பார்த்ததும் காக்கைகளுக்கு கொண்டாட்டம்.கா கா என்று கத்தியபடி பாட்டி சுட்டவடைகளை உற்சாகமாக தூக்கிச்சென்று விழுங்கின.பாட்டி அவைகளை பார்த்துக்கொண்டே இருந்தார்.அவைகளை விரட்டவில்லை.

மூன்றாவது வாரம் வந்தது. பாட்டி வழக்கம்போல் வடை கள்சுட்டு  தட்டில் வைத்தார்.காக்கைகள் கூட்டமாக பறந்துவந்து மரத்தில் அமர்ந்தன.பாட்டி சுட்டுவைத்த வடைகளை பார்த்தன.ஆனால் அவைகளை தூக்கிச்செல்ல கீழேவரவில்லை.மரத்தில் இருந்தபடியே..வடைகளை உற்று உற்று பார்த்தன.

பாட்டியும் அந்த காக்கைகளை பார்த்தார்.காக்கைகளும் பாட்டியை பார்த்தன.வடைகளை தூக்கிச்செல்லாமல் அப்படியே பார்த்த வாறு இருந்தன.ஒரு காக்கை கூட வடையை எடுக்க முயற்சி செய்யவில்லை.

அது ஏன்..குழந்தைகளே பதில் தெரிந்தால் சொல்லுங்கள் என்றார் பாட்டி….

உடனே ஒரு குழந்தை எழுந்து பாட்டி மீது பரிதாபப்பட்டு காக்கைகள் வடையை தூக்கவில்லை என்றது.அதற்கு பாட்டி இல்லை என்றார்.

உடனே மற்றொரு குழந்தை எழுந்து ..வடை இருந்த தட்டை பாட்டி மூடிவச்சிருந்தாங்க என்றது.அதற்கும் பாட்டி இல்லை என்றார்.

அப்போ எதுவாக இருக்கும் என்று குழந்தைகள் யோசித்தன.

சிறிது நேரம் கழித்து ஒரு குழந்தை மெல்ல பாட்டி எனக்கு தெரிஞ்சுட்டு..அதாவது..காக்கைகள் அன்று உண்ணாவிரதம் இருந்தன என்றது.

அதை கேட்ட பாட்டி சிரித்தார்.சமத்து..சரியான பதிலை சொல்லிவிட்டாய்..உனக்கு ஒரு மிட்டாய் பரிசு என்று சொல்லி அந்த குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாராட்டினார்.

பின்னர் பாட்டி ..சரி குழந்தைகளே..அந்த காக்கைகள் ஏன் உண்ணாவிரதம் இருந்தன தெரியுமா …பாட்டி சுட்ட வடைகளை தினமும் அதிகமாக திருடி தின்ற காக்கைகளுக்கு வயிறுவலிவந்துவிட்டது.வயிறு சரியில்லாததால் காக்கைகள் அன்று உண்ணாவிரதம் இருந்தன.

இதிலிருந்து என்ன தெரிகிறது.பிறர் பொருளை திருடினால் அது  அவர்களுக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணரவேண்டும் என்று பாட்டி சொல்லி முடித்தார். குழந்தைகள் கைதட்டி மகிழ்ந்தனர்,

வே.தபசுக்குமார்- முள்ளன்விளை ,தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *