மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளிகளை ஆட்சியர் செந்தில்ராஜ், பார்வையிட்டார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் தூத்துக்குடி வித்ய பிரகாசம் சிறப்புப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று பார்வையிட்டார்.
அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் செய்தியாளர்கள் சென்றனர், சிறப்பு பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி மேயர் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பயணித்தனர்.
மேலும், பள்ளியின் அருகில் இயங்கி வரும் முத்தம்மாள்புரம் ஊர்ப்புற நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் வாசகர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது::-
தூத்துக்குடி வித்ய பிரகாசம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் பயிலும் 15 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறு தொழில்கள் செய்வதற்கான பயிற்சி அளித்து தொழில் செய்து சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்யப்படும்
. குறிப்பாக பாக்கு மட்டை மூலம் தட்டுகள் தயாரிக்கும் பயிற்சி அளித்து வங்கிக்கடன் மூலம் தொழில் மையத்தை ஏற்படுத்தி வருமானம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பள்ளியில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு தனியாக கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் வாகன ஓட்டுநர், உதவியாளர், தூய்மைக்காவலர் என 3 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளி வாகனம் மூலம் குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள்.
வெற்றியின் பயணம் முடிவதில்லை. நாம் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் நிறைய சாதிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளார். தமிழ்நாட்டிலயே முதல் மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியில்தான் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் கடற்கரைக்கு சென்று கால்களை நனைத்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செயது தமிழ்நாட்டிற்கே முன்னோடியாக விளங்கியது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறுமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி வித்ய பிரகாசம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களுடன் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
அவருடன் தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் சென்று இருந்தனர்,







