கார்த்திகை சோம வார விரதம்
தமிழ் மாதங்கள் பன்னிரண்டிற்கும் தனித் தனியான சிறப்பு உண்டு.
அந்த வகையில் கார்த்திகை மாத மகுடச் சிறப்பான கார்த் திகை விளக்கைப் போல் அம்மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவாரம் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப் படுவதற்குப் புராணப் பாங்கான கூடுதல் கருத்தாடல் ஒன்று உண்டு.
சோமன் என்றால் திங்களாம் சந்திரனை குறிக்கும். வாரம் என்றால் நாள். பொது வாக எல்லா நாளையும் வாரம் என்றே சேர்த்து கூறும் அரிதானதோர் வழக்கம் ஒன்று உண்டு. புதன்கிழமை, வெள்ளிக்கிழமை என்பனவற்றை புதன் வாரம், சுக்கிர வாரம் என்பதாக கூறுவர். அந்த முறைப்படி சோமனாம் திங்களுக்குரியது சோமவாரம் எனப்படும்.
“இப்பெயர் எல்லாத் திங்கள்கிழமைக்கும் பொதுவானதானாலும் கார்த்திகை மாதம்திங்கள்கிழமைக்கு மட்டும் சிறப்பானதாக அமைவானேன்?’ என்பது தான் சிந்தனைக்குரியதாகிறது.
இந்தச் சோமவாரக் குறிப்பு பற்றி பரஞ்சோதி முனிவர் திருவிளை யாடல் புராணத்தில் மதுரைக் காண்டம் “இந்திரன் முடிமேல் வளையெறிந்த படல” த்தில் கூறுகிறார்.
ஒரு காலத்தில் நாடு மழையின்றி வறட்சியாக இருந்தது. சேர சோழ பாண்டியர் மூவரும் பொதியமலையில் அகத்தியரிடம் மழை பெய்யும் உபாயத்தைக் கேட்டறிய சென்றனர். அகத்தியர் அம்மூவரிடமும் “சோமவார விரதம் இருந்து, மழைக்கு அதி தேவனான இந்திரனை வேண்ட மழை பெய்யும்!” என்றார்.
மேலும் அச்சோமவார விரதம் பற்றி கூறுகையில் “தேவர்களுள் உத்தமர் சிவபெருமான், சக்திகளுள் உத்தமி உமாதேவி என்பதைப்போல, விரதங்களுள் உத்தமம் சோமவார விரதம்!” என்றார்.
அடைக்கலம் என வந்த திங்களாம் சோமனைத் தன் தலையில் சூடிக் கொண்டதால் சிவபெருமானுக்கு “சோமன்” என்று சிறப்புப் பெயர்.
மேலும் சிவந்த சூரியன் போன்ற சிவனுடன் தண்ணிய நிலவு போன்ற உமையம்மை சேர்வதால் சிவனுக்கு “சோமன்’ என்ற சிறப்புப் பெயர் அமைந்ததாகவும் சிலர் கூறுவர் என்பதால் சோமனுக்கு உரிய வாரம் சோமவாரம் ஆனது.
அந்த சோமவாரமும், “சூரியனும் சந்திரனு ம் ஒன்று கூடும் அமாவாசையான திங்கள் கிழமையாக அமைந்த நாளாய் இருக்கும் போது விரதம் மேற்கொள்வது சாலச் சிறந்தது!” என்றார் அகத்தியர்.
பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை, மார்கழி என்ற இரு மாதங்களும் சூரியனது ஆதிக்கம் இல்லாத குறையுடைய மாதங்கள் என்பதால் அவ்விரு மாதமும் சோமவார விரதம் கடைப்பிடிக் தகுதியற்றன வாகும். அவற்றோடு இரண்டு அமாவாசை வரும் ஏதாவது ஒரு மாதம் “மல மாதம்’ எனப்படும் குறையால் அந்த மாதத்திலும் விரதம் கடைப்பிடிக்க கூடாதாம்.
இவ்வாறு கார்த்திகை, மார்கழி, மல மாதம் என மூன்று மாதங்களை நீக்கிய அளவில் ஏனைய மாதத்தின் அமாவாசைக்குப்பின் வளர்பிறையாம் சுக்கில பட்ச முதல் திங்கள் கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என அகத்தியர் கூறினார்.
இப்பொதுவான கருத்தால், எந்த மாதத்தில் வளர்பிறை முதல் திங்கள்கிழமை வருகிறதோ அதனைக் கண்டறிந்து விரதம் மேற்கொள்ள காத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
அந்த வகையிலேயே முடியுடை வேந்தர் மூவரும் காத்திருந்து அகத்தியர் கூறிய படி “சோமவார விரதம்’ இருந்தனர். அதன் பயனாய் மூவரும் தேவேந்திரனை காணும் பேறு பெற்றதோடு, மழையையும் இந்திரனால் பெற்றனர் என திருவிளையாடல் புராணம் சோமவாரம் பற்றி கூறுகிறது.
இந்த அளவில் அகத்தியர் சோமவார விரத கதையை கூறினாலும், அவர் கார்த்திகை மாதத்தை நீக்கி கூறியதால் பொதுவாக உலகியலில் கார்த்திகை திங்கள் முழுவதும் ஒவ்வொரு திங்கள் கிழமையையும் “சோமவாரம்’ என்றே கூறி சிறப்பிப்பதன் காரணம் அமைந்ததை உணர வேண்டியுள்ளது.
இவ்விரதம் பற்றிய எந்த குறிப்பும் கார்த்திகை விளக்கின் மகிமையை கூறும் “அருணாசல புராணத்’திலும் கூட இல்லை. ஆனால் “அபிதான சிந்தாமணி’ நூலில் இதற்கான காரணம் கதையாக கூறப்பட்டுள்ளதை பொருத்தி பார்த்து உணரலாம்.
சித்தவர்மன் – குமரி என்ற தம்பதியர்க்கு சீமந்தினி என்ற மகள் இருந்தாள். மகளின் ஜாதகத்தை கணித்த ஜோதிடன் “இவள் 14 -ஆவது வயதில் மங்கலம் இழப்பாள்’ எனக் கூறக்கேட்டு வருந்திய பெற்றோர் யஞ்ஞவல்கிய முனிவரிடம் சென்று பரிகாரம் கேட்டனர். அம்முனிவரின் பத்தினி யான மைத்திரி என்பவர், மகள் சீமந்தினி யைச் சோம வார விரதம் இருக்கக் கூறினார்.
அவ்விதமாகக் கடைப் பிடிக்கக் கூடிய விரத நாளும் கார்த்திகை மாத பிறப்பான முதல் தேதி திங்கள்கிழமையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் அடைக்கலம் என வந்த சந்திரனுக்கு சிவபெரு மான் அனுக்கிரகம் செய்யும் பொருட்டு தன் தலைமேல் சூடிக் கொண்டார் என்ப தால், அந்நாளில் விரதம் இருப்பது உகந்தது என்றும் முனி பத்தினி சோமவார விரதம் அனுஷ்டிப்பதன் விவரத்தைக் கூறினார்அதன்படி அந்த சீமந்தினி சோமவார விரதம் கடைப்பிடித்ததன் பலனாக நிடததேசத்து சந்திராங்கதன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். விதிவசப்படி ஜோதிடன் முன்பு கூறியவாறே சீமந்தினியின் கணவன் தீர்த்தயாத்திரையின்போது புனித நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அவள் மங்கலம் இழந்தாள்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட கணவன் சில ஆண்டுகளுக்குப்பின் யமுனைத் துறைக்கு வந்தபோது அந்த முனி பத்தினி சொன்ன சோமவார விரதத்தைத் தொடர்ந் து கடைப்பிடித்த சீமந்தினியும யமுனைத் துறையில் கணவனை அடைந்தாள்.
மேற்கண்டவாறு திருவிளையாடல் புராண கதையையும், அபிதான சிந்தாமணி கதையையும் இணைத்து ஒருசேர உணர்ந்தால் கார்த்திகை பிறப்பான முதல் தேதியும் திங்கள்கிழமையும் வளர்பிறையான து மான நாளாய் அமையும் வாரமே சோம. வார மகிமை எனத் தெரிகிறது.
இது கார்த்திகை முதல் திங்கள்கிழமைக்கு மட்டுமே உரிய தனிக்குறிப்பாயினும் பொதுவாக அம்மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையையும் போற்றும் வழக்கம் வளர்ந்ததால் கார்த்திகை மாதச் சோம வார வரலாறு மகிமை பெற்றதாகி விட்டது. ஓம் நமசிவாய…
காசி விஸ்வநாதன்–திருநெல்வேலி