• March 6, 2026

ஐதராபாத்-தூத்துக்குடி இடையே ரெயில் சேவை; ரெயில்வே வாரியம் ஒப்புதல்

 ஐதராபாத்-தூத்துக்குடி இடையே ரெயில் சேவை; ரெயில்வே வாரியம் ஒப்புதல்

ஐதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரெயிலாக மாற்ற இந்திய ரெயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே காச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த ரெயில் நிரந்தரமாக்கப்படாமல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரெயில் பயண விவரம் (வண்டி எண்: 17615/17616): திங்கள்கிழமை இரவு காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை தூத்துக்குடி  வந்தடையும். மீண்டும் புதன்கிழமை காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் காச்சிகுடாவைச் சென்றடையும்.

முக்கிய நிறுத்தங்கள்: கர்னூல் சிட்டி, அனந்தபூர், திருப்பதி (பகாலா), காட்பாடி, வேலூர் கேன்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக இந்த ரெயில் இயக்கப்படும்.

தூத்துக்குடியில் இருந்து ஐதராபாத் செல்வதற்கு முதன்முறையாக நேரடி ரெயில் சேவை கிடைத்துள்ளது. இதன் மூலம் மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி போன்ற ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் பெரும் வசதியாக இருக்கும்,.. குறிப்பாக, ஐதராபாத்திலிருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள் இந்த ரெயிலைப் பயன்படுத்தி தூத்துக்குடி வர முடியும்.

தற்போது காச்சிகுடா-மதுரை சிறப்பு ரெயில் சேவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை முடிந்த பிறகு, ஏப்ரல் மாதம் முதல் இந்த ரெயில் தூத்துக்குடி வரை நிரந்தர ரெயிலாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர ரெயிலாக மாற்றப்படுவதால், இனி பயணிகள் 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கிடைக்கும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *