முட்டை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்; தென் மாவட்ட விற்பனையாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் தென் மாவட்ட முட்டை விற்பனையாளர் நலச்சங்க கூட்டம் மாநில தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்ந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் நாமக்கல்லில் இருந்து செயல்படும் பண்ணை உரிமையாளர்களே. அவர்கள் விலையை நிர்ணயம் செய்வதால் இந்த விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

எனவே விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்து தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.
தமிழகத் தேவை பூர்த்தி அடைந்த பின்பு மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
முட்டை விலை உயர்வு காரணமாக தமிழகம் மற்றும் தென் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான சில்லறை முட்டை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது பண்ணை உரிமையாளர்கள் நேரடியாக முட்டை விற்பனையில் ஈடுபடுவதால் முட்டை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும் சில ஆண்டுகளாக டிசம்பர் மாதங்களில் சத்துணவுக்கு முட்டை டெண்டர் காலமாக இருப்பதால் முட்டை விலை கடுமையாக உயர்ந்து அதன் மூலம் டெண்டர் எடுப்பவர்கள் மற்றும் சிலர் லாபம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு முட்டை விலை உயர்ந்து வருகிறது.

வாரம் இரு முறை முட்டை விலையை நிர்ணயம் செய்தால் சிறிய அளவிலான முட்டை வியாபாரிகள் பயன் பெறுவார்கள். முட்டை வியாபாரிகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டை வியாபாரிகள் விரைவில் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.







