கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் வந்து காட்சி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

விழாவின் 9-ம் நாளான இன்று(புதன்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8:30 மணி அளவில் மூலவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி காலை 11.12 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
விழாவில், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ், சங்க நிர்வாகிகள், ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சண்முகராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜகோபால், மதிமுக நகர செயலாளர் பால்ராஜ், அதிமுக மாதவராஜ், மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விழாவின் 11-ம் நாளான 14-ம் தேதி பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். அன்றிரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 12-ம் நாளான 15-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) மு.வள்ளிநாயகம் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.







