• March 6, 2026

காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா; ஆகஸ்டு 6 கொடியேற்றம்

 காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா; ஆகஸ்டு 6 கொடியேற்றம்

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம் கடந்த 18.7.2023-ல் பேராலயமாக (பசிலிக்காவாக) உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இந்த பேராலயத்தின் 2-வது விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்டு 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய பெருவிழா ஆக.6-ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் பெருவிழா கொடியேற்றுகிறார்.

தொடர்ந்து 9-ம் தேதி மரியன்னை மாநாடு நடக்கிறது. 11-ம் தேதி புதுநன்மை விழா நடக்கிறது. 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தென்காசி மறைமாவட்ட ஆயர் எஸ்.ஏ.அந்தோனிசாமி, பாளையங்கோட்டை ஆயர் இல்லம் அருட்பணி எம்.சார்லஸ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

 15-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு எனது தலைமையில் தேரடித் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள். இதற்கு தேவையான அனைத்து வசதிகளை செய்யப்பட்டு வருகின்றன.

விழாவையொட்டி, மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வசதியாக  ஆக.14-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். இந்தாண்டு கண்டிப்பாக விடுமுறை வழங்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து கூறினார்.

அப்போது திருத்தல பேராலய அதிபர் எம்.மோயீசன், உதவி பங்குத்தந்தை ஜெ.நிரோ ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

விழாவில் 15-ம் தேதி அதிகாலை நற்கருணை பவனி தேரின் பின்னால் கும்பிடு சேவை செய்து, கிறிஸ்தவர்கள் நேர்ச்சை செலுத்துவார்கள். அன்று நண்பகல் 12 மணிக்கு மலையாளத்திலும், பிற்பகல் 2 மணிக்கு ஆங்கிலத்திலும், மாலை 4 மணிக்கு இந்தியிலும் திருப்பலி நடக்கின்றன. மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி சேசு சபை அருட்தந்தையர்கள் சார்பில் நடக்கிறது.

கொடியேற்றம் மற்றும் பெருவிழாவையொட்டி கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *