சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில ஆக்கி: தூத்துக்குடி அணி 4-வது இடம்

வேலூரில் சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி கலந்து கொண்டு விளையாடியது. போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.

மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்ட இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி முதல் லீக் சுற்று போட்டியில் எச் பிரிவில் முதலிடம் பெற்று நாக்அவுட் சுற்றான கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சென்னை அணியை 2-0 என்று கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடர்ந்து அரை இறுதி போட்டியில் மதுரை மாவட்ட அணியிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. நான்காவது இடத்தை பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணி இன்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தபோது ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக வீரர்களையும் அணி மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் அணி பயிற்சியாளர் சதீஷ், அணியின் தலைவர் முகுந்தன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி உறுப்பினர்கள் சுரேஷ்குமார், வேல்முருகன், ஈஸ்டர், சிவசூரியன், மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

