சென்னையில் கனிமொழி எம்.பி.பங்கேற்ற பொங்கல் விழா
சென்னை திமுக 131வது வட்டத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2000 பேருக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா சென்னை அசோக்நகர் – 10வது அவென்யூ கலைஞர் பொதுநல மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி பேசியதாவது:-
நம் எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவையெல்லாம் நிச்சயம் நடக்காது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர், அண்ணன் தளபதி வழியில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நம்முடைய முதலமைச்சர், பெண்களுக்கு விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் , என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆகையால் நம் எதிரிகளுக்கு நம்மை பார்த்தாலே பயம் இருக்கத்தான் செய்யும். இந்த பொங்கல் நன்னாளில் அவர்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் நமக்கு தேவையில்லை.
இன்று நான் வரும் வழியெங்கும் பார்த்தேன் அனைவரும் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து கண்களில் கண்ணீரோடு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்கள், ஆனால் அவர்கள் கண்களில் கண்ணீர் வந்ததற்குக் காரணம் அந்த விறகடுப்பில் வந்த புகைதான். இதைத்தான் தலைவர் கலைஞர் அன்றே கணித்து பெண்களின் கண்களில் இனி புகையால் கூட கண்ணீர் வரக்கூடாது என்பதற்காக விலையில்லா கேஸ் அடுப்பை வழங்கினார்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
விழாவில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ., தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்