பஸ்சில் பசியின் குரல் …

கோவில்பட்டி பஸ்நிலையம்..
மதியம் 2 மணி.. வெயில் கொளுத்தியது .பஸ்கள் அங்கும் இங்கும் ஹாரன் அடித்தபடி பஸ்நிலையத்துக்குள் சீறிப்பாய்ந்தவண்ணம் இருக்க..பயணிகள் சென்றவண்ணம் இருந்தனர்.
தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஒரு பஸ்சில் திபு திபு என்று கூட்டம் ஏறியது..இருக்கையை பிடிக்க கூட்டம் அலை மோதியது.இருக்கை கிடைத்தவர்கள் அப்பாட..இடம் கிடைச்சுது இல்லைன்னா நின்னு தொலைக்கணும் ..கூட்ட நெரிசலில் நசுங்கிப்புடுவாங்க என்று சிலர் முணுமுணுத்தபடி இருந்தனர்.
பஸ்சில் கூட்டம் நிரம்பியபின்னும் டிரைவர் பஸ்சை எடுக்கவில்லை. வியர்வையில் பயணிகள் நனைந்தனர்.என்னடா..இது..பஸ்சை உடனே எடுக்கமாட்டாங்க போலிருக்கே..எப்பய்யா பஸ்சை எடுப்பீங்க என்று சில பெரியவர்கள் வெக்கை தாங்காமல் கத்தினர்.
கண்டக்டர்..பத்து நிமிடம் ஆகும் என்று சொல்லியபடி பஸ்சைவிட்டு இறங்கிச் சென்றார்.பத்து நிமிசமா..அதுக்குள்ளே வேறு பஸ்சு வந்தா போயிடவேண்டியதுதான்..அப்பாட..என்ன வெயில்..என்ன வெயில் என்று முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தனர்.வயிறு வேற பசிக்குது..பஸ்சை எடுத்தா வீட்டிலே போயி சாப்பிடலாமுன்னு பாத்தா விடமாட்டாங்க போலிருக்கே..என்று சிலர் தங்கள் வயிற்றைத் தடவிக்கொண்டனர்.
அந்த நேரத்தில் சூடான போளி..போளி என்றபடி ஒருவர் ஒரு பாத்திரத்தைத் தூக்கியபடி பஸ்சுக்குள் வந்து விற்பனையைத் தொடங்கினர்.சிலர் கொஞ்சம் வயிற்றுப்பசி அடங்கும் என்றபடி காசு கொடுத்து போளியைவாங்கி சாப்பிடத் தொடங்கினர்..அப்போது வாட்டர் பாட்டில்..வாட்டர் பாட்டில் என்று மற்றொருவர் பஸ்சில் வலம் வர..சிலர் வாட்டர் பாட்டில் வாங்கினர்..எழுந்து போய் கடையிலே வாங்க முடியாது….தாகம் தீரணுமே வாங்கி குடித்தார்கள்.
அப்போது..பஸ்சில் கிழிந்த சேலைகட்டிய ஒரு பெண் தன் இடுப்பில் ஒரு கைக்குழந்தையுடன் ஏறினாள்.அவள் அருகில் அழுக்கான சட்டையுடன் ஐந்து வயசில் ஒரு பெண் குழந்தை..ஏழ்மையின் வடிவம் உடல் மெலிவில் தெரிந்தது.அந்தப் பெண்..அய்யா..சாப்பிட்டு இரண்டு நாளாச்சு..பசி காதை அடைக்குது..அய்யா தர்மம் பண்ணுங்கய்யா என்று அழுகிற குரலில் கேட்டார்.
கைக்குழந்தையும் பசியில் வீல் என்று கத்த அருகில் நின்ற பெண் குழந்தை அம்மா,பசிக்குதம்மா என்று குரல் எழுப்ப..அதன் தாய்..கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிதறின.ஒவ்வொரு இருக்கையாக அவள் தன் சோகக்கதையை கூறியவாறு பசிக்குது தர்மம் போடுங்க..என்று கேட்க..போளியை பாதி தின்றபடி இருந்தவர்கள்.திரும்பிக்கொண்டார்கள்.
சிலர் தூங்குவது போல் நடித்தார்கள்.யாரும் அவள் சோகத்தை கேட்டதாகத் தெரியவில்லை.அவள் கண்களில் நீர் கொட்டியபடி…யாருக்கும் காது கேட்கலையா..என் குழந்தைங்க பசியை தீர்க்கமாட்டியளா என்றபடி தள்ளாடியவாறு அவள் பஸ்சை விட்டு இறங்க முயன்றபோது..கடைசி இருக்கையிலிருந்து ஒரு முதியவர் குரல்…
நில்லும்மா..என்றவாறு தான் தொங்கவிட்டிருந்த பையிலிருந்து இரண்டு உணவு பொட்டலங்களை எடுத்தார்.குழந்தைகளுக்கு கொடும்மா..கோயில் போய் அன்னதானம் பண்ண கொண்டு போறேன்..வழியிலே உனக்கு கொடுக்கிறேன் என்று ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தார்.
அவைகளை வாங்கிக்கொண்ட அந்தப் பெண்..அய்யா..நீங்க ரொம்ப நல்லாயிருக்கணுமய்யா என்று கையெடுத்து கும்பிட்ட..அந்த முதியவரோ..என்ன சொல்லுறாம்மா..எனக்கு சரியா காது கேட்காது..இன்னும் இரண்டு பொட்டலம் வேணுமா என்றார்.
அந்தப் பெண் ஓ..என்று அழுதாள்…பஸ்சிலிருந்த அனைவரும் காதிருந்தும் கேட்காதவர் போலிருந்தனர்.காது கேட்காத முதியவருக்கு என் பசி குரல் கேட்டிருக்கு என்றபடி அவள் பஸ்சைவிட்டு இறங்கினாள்.அந்த முதியவர் பஸ்சில் இருந்தவர்களிடம்..அந்த பொண்ணு என்ன சொல்லுது என்று கேட்க..யாரும் பதில் சொல்லவில்லை.பஸ் புறப்பட்டு சென்றது.
வே.தபசுக்குமார், முள்ளன்விளை.தூத்துக்குடி.
