• May 19, 2024

பள்ளிக்கூடத்தில் கீரி …(சிறுகதை)

 பள்ளிக்கூடத்தில் கீரி …(சிறுகதை)

ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருந்தார்.அவர் எப்போதாவது பேரன்களுக்கு கதை சொல்வார்.

அன்று மாலை நேரம், .பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய பேரன்கள் .கை கால் முகத்தை கழுவிவிட்டு திண்ணைக்கு வந்தனர்.

.அங்கே அமர்ந்திருந்த தாத்தா தன் பேரன்களை பார்த்து என்ன பேரன்களா..பள்ளிக்குப் போயிட்டு வந்திட்டிங்களா..உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டார்.

பேரன்கள் … தாத்தா ஏதாவது புதிர் கதை சொல்லி விடை கேட்பார் என்று நினைத்து..வேண்டாம் தாத்தா..பள்ளிக்கு போயிட்டுவந்தது ரொம்ப களைப்பா இருக்கு தாத்தா என்றனர்.

.அதற்கு தாத்தா….உங்கள் களைப்பை போக்க..உங்க பள்ளியில் நடந்த ஒரு நகைச்சுவை புதிர் கதையை சொல்லட்டுமா என்றார்.

பேரன்களும்..என்ன தாத்தா எங்க பள்ளியில் நடந்த கதையா..சொல்லுங்க…சொல்லுங்க என்றனர்.

[தாத்தா ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு கதை சொல்ல தொடங்கினார்.

ஒரு ஊரிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.அது பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை இருந்தது.அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்தனர்..

கிராமத்திலிருந்து சுரேஷ் என்ற மாணவனும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்..பள்ளிக்கு பின்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் மற்ற மாணவர்களுடன் விளையாடுவான்….பழைமையான பள்ளிக்கட்டிடத்தையே அவன் எப்போதும் கூர்ந்துபார்த்துக்கொண்டிருப்பான்..

அன்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றான்.அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல மறுத்தான்.ஏன் பள்ளிக்கு போகமாட்டேங்கிற… என்று அவனது தந்தை கேட்டபோது பள்ளியில் கீரி இருக்கு என்றான்..

அதை கேட்ட அவர் பள்ளிக்கு எப்படிடா கீரி வரும் என்று கேட்டார்.அவனோ..கீரி இருக்கு நான் பார்த்தேன் என்றான்.அதற்கு அவர்..பள்ளிக்கு பின்னால் காடு இருக்கா என்று கேட்டார்/

.அவனும் ஆமா..முள்காடு இருக்கு..என்றான்.அவரும்..ஆமா..காடு இருக்கிறதால பள்ளிக்கு கீரி வந்திருக்கும் என்று நினைத்தார்.சரி..பயப்படாதே..கீரி ஓடியிருக்கும்..பள்ளிக்கு போ என்றார்.

அவனோ..மூணு நாளா பாத்தேன்..அங்கேதான் கீரி இருக்கு என்றான்.அவனது தந்தை திடுக்கிட்டார்.என்னடா..மூணு நாளா இருக்கா..வா..கம்பு எடுத்துட்டு போவோம்..இன்னைக்கு இருந்தா அடிப்போம் …

அவனும் சரி என்றான்.தந்தையும் மகனும் கம்பை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு போனார்கள்..கம்போடு வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஆசிரியர்…

.என்ன பிரச்சினை கம்போடு வந்திருக்கீங்க என்று கேட்டார்.அதற்கு மாணவனின் தந்தை..என்னங்க..பள்ளியிலே கீரி இருக்குங்கிறான்..நீங்க எல்லாம் அதை பார்க்க மாட்டிங்களா என்று சத்தம் போட்டார்.

அதை கேட்ட ஆசிரியர்..என்ன சொல்லுறீங்க..பள்ளியிலே கீரி இருக்கா என்று அதிர்ச்சியோடு மாணவன் சுரேஷிடம் கேட்டார்.அவன் ஆமா பள்ளியிலே கீரி இருக்கு என்றான்

.எங்கேடா..கீரி இருக்கு என்று ஆசிரியர் அதட்டிக்கேட்டார்.அதற்கு அவன் பள்ளிக்கு பின்னால் வாங்க காட்டுறேன் என்றான்.

என்ன சொல்லுறான் ஆச்சரியமா இருக்கே என்றபடி ஆசிரியர் அந்த மாணவனை அழைத்துச்சென்றார்.

.மாணவனின் தந்தை கையில் கம்பை எடுத்துக்கொண்டு சென்றார்.மற்ற மாணவர்களும் பின்னால் சென்றார்கள்.மாணவன் சுரேஷ் அவர்களை பள்ளிக்கு பின்னால் அழைத்துச்சென்றான்.

ஒருவேளை கீரி வந்தாலும் வரும் என்று பதட்டத்துடன் அவர்கள் மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்தனர்.

மாணவன் சுரேஷிடம் எங்கேடா கீரி இருக்கு..காட்டு என்றார்கள்.அவன் பயத்தோடு ஒரு இடத்தை சுட்டிக் காட்டி பாருங்கள் கீரி இருக்கு என்றான்..

அவர்கள் ..கூர்ந்துபார்த்தனர்.சிரிப்பை அடக்க முடியாமல் என்று சிரித்தனர்.அது ஏன் ?அந்த இடத்தில் கீரி இருந்துச்சா இல்லையா என்று தாத்தா கேட்டார்.

இதான்.தாத்தா புதிர் கதை சொல்லிட்டு விடை கேட்பாருன்னு சொன்னேன் இல்லையா..கேட்டுவிட்டார் என்று பேரன்கள் சிரித்தனர்.

தாத்தா கோபமாக..கீரி இருந்துச்சா இல்லையா என்று கேட்டார்.

பேரன்கள் அமைதியாக சிந்தித்தனர்.பின்னர் தாத்தா கீரி இருந்தா எல்லோரும் பயந்து ஓடியிருப்பாங்க..அதானல அங்கு கீரி இருக்க வாய்ப்பில்லை என்றனர்.

அப்படியென்றால் என்ன இருந்தது என்று தாத்தா மீண்டும் கேட்டார்.பள்ளிக்கு அருகில் கீரி என்று மாணவன் சொல்லவில்லை..பள்ளியில்தான் கீரி இருக்கு என்றான்…அப்படி என்றால் பள்ளியில் கீரி இல்லை.கீறிதான் இருந்திருக்கு .பள்ளிகட்டிடம் உடைச்சிருக்கு என்று சொல்வதற்கு பதிலாகபள்ளியில் கீரி இருக்கு என்று சொல்லி இருக்கான் என்றனர்.

தாத்தாவும் சரியாக சொன்னீர்கள்.சின்னப்பையன் பழமையான பள்ளிக்கட்டிடத்தின் பின்பகுதி கீறி இருப்பதை பார்த்திருக்கான்.இப்படி இருந்தால் கட்டிடம் இடிந்துவிழுந்து மாணவர்கள் உயிர் சேதமாகிவிடுமே என்று பயந்திருக்கான்.அவன் சொன்னதில் தப்பில்லை.சொன்னவிதம்தான் தப்பு.அப்புறம் அந்த பழைய கட்டிடத்தை இடிச்சிட்டு புதுகட்டிடம் கட்டினாங்க..அந்த பள்ளிக்குத்தான் இப்போ நீங்கபோய் படிக்கிறீங்க என்றார் தாத்தா.

பின்னர் ஒரு கருத்து சொன்னார்.பேரன்களே..ஒரு விசயத்தை யார் சொல்லுறாங்கன்னு பார்க்கக்கூடாது.அதிலே என்ன விசயம் இருக்குன்னு பார்க்கணும்..புரியுதா என்று கேட்டார்.பேரன்கள் தலையை அசைத்தனர்.

வே.தபசுக்குமார்.முள்ளன்விளை.தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *