ஜெயிலர் 2 வெளியீடு: ரஜினிகாந்த் ரசிகர்கள் கோவிலில் அங்கப்பிரதட்சணம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் வெற்றி பெற வேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி நலமாக வாழ வேண்டியும் கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர் மன்ற நகரப் பொறுப்பாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார், நகரச் செயலாளர் மகேஷ் பாலா, இணைச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரஜினி ரசிகர்கள் பலர் கதிர்வேல் முருகன் கோவிலில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிக்கெட் வைத்து பூஜை செய்து அங்கப் பிரதட்சணம் வழிபாடு நடத்தினர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கார்த்திகேயன், தங்கராஜ், செய்யது அலி, பாலாஜி, ராகவேந்திரா, செந்தில்குமார், பாண்டி, ரஜினிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ரஜினி ரசிகர் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் செய்திருந்தார்.







