சென்னையில் அரசு விழாவில் பரபரப்பு: குத்துவிளக்கு ஏற்ற மேயர் அனுமதிக்காததால் வெளியேறிய தவெக எம் எல் ஏ
சென்னையை அடுத்த புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடம்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தை முறைப்படி திறந்து வைத்து குத்துவிளக்கினை ஏற்றினார்.
விளக்கேற்றி முடித்தவுடன், மரபுப்படி தனக்கு அருகில் நின்றிருந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல், அவரைத் தாண்டி அடுத்ததாக நின்றிருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் மேயர் பிரியா அதனை நேரடியாக வழங்கியுள்ளார்.

மெழுகுவர்த்தியை வாங்குவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி கையை நீட்டிய போதும், மேயர் அதனைப் பொருட்படுத்தாமல் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மேடையில் பகிரங்கமாகத் தனக்கு நேர்ந்த அவமதிப்பால் கடும் அதிருப்தியடைந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, விழா நிறைவடையும் முன்பே நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக வெளியேறினார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப்பள்ளியில் நடந்த அரசு நிகழ்ச்சியிலும் மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகிய இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர்.
முந்தைய கசப்பான சம்பவத்தைச் சரிசெய்யும் நோக்கில், இம்முறை மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு, கையில் இருந்த மெழுகுவர்த்தியைச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் நேரடியாக நீட்டினார். ஆனால், புளியந்தோப்பு பள்ளியில் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பைக் மனதில் வைத்து ஆத்திரத்திலிருந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, மேயர் பிரியா கொடுத்த மெழுகுவர்த்தியை வாங்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மேயர் தரப்பில் அவரை மீண்டும் குத்துவிளக்கேற்ற வருமாறு வற்புறுத்தி அழைத்தபோதும், அவர் தனது முடிவில் தீர்க்கமாக இருந்து அதனைத் திட்டவட்டமாக நிராகரித்தார்.

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இருவேறு அரசுப் பள்ளி மேடைகளில் அரங்கேறிய இந்த மெழுகுவர்த்தி விவகாரம், தற்போது சென்னை மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.







