தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா”; சென்னையில் மழை


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இந்நிலையில் ‘மோன்தா” புயல் இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோந்தா புயல் காரணமாக காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 10ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்று (27-10-2025) காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-10-2025) காலை 0530 மணி அளவில் தீவிரப்புயலாக வலுப்பெற்று, காலை 830 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மசூலி பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்மேற்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக, இன்று (28-10-2025) மாலை / இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நேற்று (27-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (28-10-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
இன்று (28-10-2025): தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் கரையைக் கடக்கும்போது சென்னையில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.







