• June 7, 2025

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள்; மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள்; மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி காலையில்  அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்,

இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில்  அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.அப்போது அங்கிருந்த கனிமொழி எம்.பி., அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜ எம்பார் ஜீயர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்தினர்.

தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீ்ப் ராய் ரத்தோர், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அதிகாரிகள், மநீம தலைவர் கமல்ஹாசன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் உள்ளிட்டோரும் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மோடி-கவர்னர் ரவி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து கடிதத்தில், முதல் அமைச்சர்  மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை கொண்டாடுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் தலைமையில் மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்ததுகிறேன். பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்வலைதளத்தில், “எனது சகோதரரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில்,  “முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.    


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *