அரசியலில் முத்திரை பதித்த பேச்சு கலை பேரரசர் முத்துராமலிங்க தேவர்: தவெக தலைவர் விஜய்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடந்து கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் நினைவிட்டத்தில் அவரது சிலைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காக காத்திரமாக களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்த துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சு கலை பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜை திருநாளில் வணங்கி வாழ்த்தி போற்றுவோம். என குறிப்பிட்டுள்ளார்.