• November 1, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள்: கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள்: கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

உலக புகழ் பெற்ற தலமாக மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இதனால்தான் மதுரை கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது.

இந்த நிலையில் அடுத்தது 2021 ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018-ம் ஆண்டு மீனாட்சி கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த வசந்தராயர் மண்டபம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறிப்பிட்ட வசந்தராயர் மண்டபம் முழுவதும் தீக்கிரையாகி கலைநயமிக்க கல்தூண்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.25 கோடி மதிப்பில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி தற்போது கோபுரத்தில் மராமத்து பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. எனவே திருப்பணிகள் மேற்கொள்ள உபயதாரர்கள் சிலர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு ராஜகோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் என 5 கோபுரங்களில் திருப்பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

சேதம் அடைந்த சிலைகள், கோபுரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீரமைத்து, பெயிண்ட் அடித்து இந்த பணிகள் முடிவடைய சுமார் 2 ஆண்டு காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அந்த பணிகளும் 2 ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. எனவே 2026-ம் ஆண்டுக்குள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் கோயிலுக்கு அருகே வசிப்போர் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக கோவில் கோபுரங்களை சுற்றி திரைத்துணி சுற்றப்பட்டுள்ளது. சாரமும் கட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு அருகில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி தீபாவளி அன்று வாணவேடிக்கையின் போது எளிதில் தீப்பற்றக்கூடிய, ஆபத்தை விளைவிக்கக் கூடிய பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *