கிராம நிர்வாக அலுவலர் மீது மோதிய லாரி மீது கல்வீச்சு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி. இவர் சாத்தான்குளம் தாலுகா கருங்கடல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கருப்பசாமியும், அவருடைய உறவினர் சொல்விளங்கும் பெருமாளும் நெல்லைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பினர். மணல்விளை பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் கருப்பசாமி, சொல்விளங்கும் பெருமாள் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
உடனே லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள்களில் லாரியை விரட்டி சென்றனர். இதனால் சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சேரகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த கருப்பசாமி, சொல்விளங்கும் பெருமாள் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கிளாக்குளத்தைச் சேர்ந்த அர்ஜூனனை கைது செய்தனர்.