தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள்.
சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடி மரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எஸ்.பி., பாலாஜி சரவணன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா உள்பட லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பாலன், பனிமய மாதா அன்னை பேராலய பங்கு மேய்ப்பு பணிக்குழுவை சேர்ந்த துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், துணைச் செயலாளர் பெனார்ட், பொருளாளர் ஜோசப்சொரீஸ், அருட்சகோதரர் தினகரன், மற்றும் பங்குப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.
.