கோவில்பட்டியில் பளு தூக்கும் போட்டி: நாங்குநேரி கல்லூரி அணி `சாம்பியன் ‘

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் பளுதூக்கும் (Weightlifting) போட்டி, கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பளுதூக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டி தொடக்க விழாவில், ஜி.வி.என். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கோதையம்மாள் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் செயலாளர் ப. மகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மைய இயக்குநரும் தலைவருமான எஸ். ஆறுமுகம், ஜி.வி.என். கல்லூரி முதல்வர் அ. பாண்டியராணி, கல்லூரியின் சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் பி.சிவஞானம்,பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஆ. செய்யது அலி ஆகியோரும் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது உடல் வலிமை, திறமை மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி உற்சாகத்துடன் போட்டியிட்டனர்.
போட்டியின் பல்வேறு கட்டங்களை கடந்து பளு தூக்கும் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நாங்குநேரி பன்னிரு பிடி அய்யன் கல்லூரி அணி பெற்றது.

இரண்டாம் இடத்தை கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி அணி, மூன்றாம் இடத்தை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி, நான்காம் இடத்தை பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி அணி பெற்ற து.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு ஜி.வி.என். கல்லூரி முதல்வர் அ. பாண்டியராணி, சுயநிதிப் பிரிவுப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா. மகேஷ்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மைய இயக்குநரும் தலைவருமான எஸ். ஆறுமுகம் ஆகியோர் இணைந்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் கோதையம்மாள், மகுமரேச சீனிவாசன் மற்றும் கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் சு. ராம்குமார் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.







