இந்தியா-நியூசிலாந்து 3-வது டெஸ்ட் : கேன் வில்லியம்சன் விலகல்

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி நவம்பர் 1-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இலங்கை தொடரின் போது அடைந்த காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கவில்லை.
இதன் காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியிலாவது அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி., இந்திய அணிக்கு எதிரான 3-வது போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி கட்ட போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அவரை இந்த போட்டியில் விளையாட வைத்து மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதனால் அவருக்கு இந்த 3-வது போட்டியிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
