தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயர்வு கோரி 28ந்தேதி முதல் வேலை நிறுத்தம்; தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் ஐ.என்.டி.யூ.சி., அகில இந்திய அமைப்புச் செயலாளர் பி. கதிர்வேல், சியூ.டியு தொழிற்சங்க செயலாளர் ரசல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அன்னிய செலவாணி மற்றும், நம் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியில் முக்கிய பங்காற்றும் பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் தங்களுக்கு 1-1-2022 வழங்கபடவேண்டிய ஊதிய உயர்வு வழங்கபடாததை கண்டித்து வேறு வழியின்றி கடைசி ஆயுதமாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை 28-ந்தேதி முதல் தொடங்க உள்ளனர்.
மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் அலட்சியம் மற்றும் ஆணவ போக்கினால் 7 முறை இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும், ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 32 மாதங்கள் கடந்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அலட்சிய போக்கில் செயல்படும் கப்பல் துறை அமைச்சக அதிகாரிகளின் நடவடிக்கைகள் துறைமுக ஊழியர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
சென்னை துறைமுகத்திலுள்ள சில அதிகாரிகளின் தூண்டுதலால், கப்பல் துறை அமைச்சக அதிகாரிகள் சிலர் இப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு முக்கிய காரணம். பெரிய துறைமுக அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டு தங்களின் சுயலாபத்திற்காக பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊதிய மாடலை ஏற்றுக்கொண்டு 50% சதவீத கேப்டீரியாவை பெற்றுக்கொண்டு மத்திய அமைச்சகத்தில் தங்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்து கொண்டார்கள்.
மேலும் 5 வருடத்திற்கு ஒரு முறை என்று இருந்த ஊதிய உயர்வு காலத்தை 10 வருடம் என்று நிர்ணயம் செய்து கொண்டார்கள். 50% கேப்டீரியா என்ற ஓரே காரணத்திற்காக தாங்கள் நியாயமாக பெறக்கூடிய 20,000 பேசிக் பே 16400 ஆக குறைத்து பெற்றுக் கொண்டது அவர்கள் செய்த மிக பெரிய தவறு, அதற்கு நாம் (Class-III & IV) எப்படி பொறுப்பேற்க முடியும்.
கேடர் அதிகாரிகளுக்கு கேப்டீரியா அலவன்ஸ் கிடையாது என்று விதி இருந்தும் இன்றைக்கும் பல துறைமுகங்களில் பணியாற்றும் IAS மற்றும் IRS ஆபிசர்கள் அதை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறிருக்க Class III Class-IV ஊழியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு பலன்களை தர மறுக்கும் நிர்வாகத்தின் போக்கு சர்வாதிகரமானது.
ஓப்பந்தம் காலாவதியாகி 32 மாதங்கள் கடந்த பின்னரும், ஊதிய உயர்வுக்கு மறுப்பு தெரிவிக்கும் கப்பல் துறை அமைச்சகத்தின் அலட்சிய போக்கும் மற்றும் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளும் தான் இந்த இழுபறிக்கு காரணம். இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதுவரை தொழிற்சங்க சரித்திரத்தில் ஒரு தரப்பு நிபந்தனைகள் விதிப்பது என்பது இது வரை நடந்திடாத ஒன்று.
எனவே மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் பிடிவாத போக்கை கண்டித்தும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையோடு நாடு தழுவிய அனைத்து சம்மேளனங்களும் எச்எம்எஸ், சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐடியூசி மற்றும் அனைத்து பாஜக சார்ந்த பிஎம்எஸ் உட்பட தொழிற்சங்கங்களும் 28 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்..
பேட்டியின் போது தொழிற்சங்க நிர்வாகிகள் முகமது ஹணீப், சுரேஷ், துறைமுகம் சத்யா, அமிர்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.