அத்துமீறும் பாகிஸ்தான்: இதுவரை அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தன. இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது.
பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

பூஞ்ச் பஸ் நிலையத்திலும் குண்டுகள் விழுந்தன. இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. எண்ணற்ற வீடுகளும் இடிந்து விழுந்தன. நேற்று மதியம்வரை, தாக்குதல் கடுமையாக இருந்தது. அதன்பிறகு விட்டுவிட்டு தாக்குதல் நடந்தது. அதிலும், பூஞ்ச் மாவட்டத்தில் மட்டுமே தாக்குதல் நீடித்தது.
தொடர்ந்து குண்டுகள் வந்து விழுந்ததால், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அதில், பாகிஸ்தான் தரப்பில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதலில் இதுவரை 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல்களின் விளைவாக பூஞ்சில் 44 பேர் உட்பட மொத்தம் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நேற்று (மே 7ம் தேதி) மற்றும் இன்று (8 ஆம் தேதி)களின் இடைப்பட்ட இரவில், ஜம்முவில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் செக்டார்களுக்கு எதிரே உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தூண்டுதலற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
