நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள்

மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் வருமாறு:-
*எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.

*எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை செய்யப்பட வேண்டும்
*முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
*வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
*அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.

*அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல். இந்தப பயிற்சி கிராம மட்டம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
*மாவட்டக் கட்டுப்பாட்டாளர்கள், உள்ளூர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படையினர் (செயலில் உள்ளவர்கள் மற்றும் ரிசர்வ் வீரர்கள்), தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC), தேசிய சேவைத் திட்டம் (NSS), நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இந்தப் பயிற்சியில் தீவிரமாகப் பங்கேற்பார்கள் “
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

