• May 15, 2025

சென்னையில் இருப்பதை விடவும், மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள்; அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

 சென்னையில் இருப்பதை விடவும், மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள்; அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து \முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்!

தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர்  நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை

பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் போப் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

*திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் – 224 பகுதிகள் – 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்துவது.

*திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் நம் ஒப்பற்ற கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும்

*திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது  பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத்துறை போன்ற எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் – மக்கள் மன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *