ரெயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள புனலூர் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், புனலூர் நிலையத்தை வந்தடைந்த உடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 34 லட்சம் ரூபாய் இருந்தது, இதையடுத்து விசாரணையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சோ்ந்த அப்துல் அஜீஸ் (35), விருதுநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (40) என்பது தெரியவந்தது.
அவர்களிடம். உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.34 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


