• April 27, 2024

8_ம் நம்பர் வீடு… (சிறுகதை)

 8_ம் நம்பர் வீடு… (சிறுகதை)

மாலை நேரம்..வினோத்..அந்த 8-ம் நம்பர்  வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான்…

வீடு வாடகைக்கு விடப்படும்..தொடர்புக்கு அலைபேசி எண்..குறிப்பிடப்பட்டிருந்தது.
வினோத் அந்த எண்களை தனது செல் போனில் ஏற்றினான்.
பின்னர் அந்த எண்ணுக்கு அவன் தொடர்பு கொள்ள முயன்றான். பிசியாக இருந்தது.

சிறிது நேரம் கழித்துப் பேசலாம் என்று நினைத்தவன் வீட்டை நோட்டமிட்டான்.
கேட்டுக்கு வெளியே நின்று பார்த்தபோது  சிறிய வீடு போல் தெரிந்தது

.நான் ஒரு ஆள்தானே..சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்
மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.எதிர்முனையில் ஒரு பெண் குரல்… ஹலோ..யார் பேசுறது.. இனிமையான அந்த குரல் கேட்டு வினோத் ஒருநிமிடம்.. சிலிர்ப்படைந்தான்.பின்னர்..குரலை சரி செய்து கொண்டு..ஹலோ..நான் வினோத் பேசுறன்..

தனியார் கம்பெனியில் வேலைப் பார்க்கிறேன்..நல்ல சம்பளம்..வீடு வாடகைக்கு வேணும் என்றான்.

எதிர்முனையில் பேசிய பெண்..நீங்க திருமணம் ஆனவரா..என்று கேட்க..

வினோத் அவசரமாக.. அதெல்லாம் ஆகலைங்க..நான் இப்போ சிங்கிள்..என்றான்.
எதிர்முனையில்..அப்படியா..பேச்சிலரா..யோசிச்சு சொல்றேன் என்க..

வினோத் பதற்றமாக..ஏங்க பல இடங்களில் கேட்டுவிட்டேன்..யாரும் வீடு தரமாட்டேங்கிறாங்க..நீங்க இல்லைன்னு சொல்லாதீங்க என்று கெஞ்சினான்.

எதிர்முனையில் பேசிய பெண்…ஏங்க இது பெரிய வீடு..வாடகை அதிகம்..தனி ஆளுக்கு தேவையா என்று கேட்க..

வினோத் பரவாயில்லைங்க..எனக்கு வாடகை அதிகமானாலும் பரவாயில்லை..வீடு வேணும் என்றான்.

எதிர்முனையில் பத்தாயிரம் வாடகை..முப்பதாயிரம் அட்வான்ஸ்..ஓ.கேவா என்ற குரல் கேட்டது.
வினோத்..வீடு கிடைச்சா போதும் என்க   அந்தப் பெண்..பத்து நிமிடம் கழித்து மீண்டும் பேசுங்க முடிவு சொல்லுறோம் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

வினோத்..கைகளை பிசைந்தபடி..நின்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு முதியவர் கம்பு ஊன்றியபடி அங்கு வந்தார். வினோத்தைப் பார்த்து,என்ன தம்பி..வீடு பாக்கியளா என்று கேட்க,வினோத் ஆமா என்று தலையை அசைத்தான்.
முதியவர்…ஓ..நல்லது..போனில் பேசிட்டிங்களா என்க,வினோத்..ஆமா பேசிட்டேன் என்றான்.
முதியவர் விடவில்லை.என்னதம்பி..ஒரு பெண் பேசியிருக்குமே..வாடகை பத்தாயிரம்..அட்வான்ஸ் முப்பதாயிரம் என்று சொல்லியிருக்குமே..என்றார்.

வினோத் ஆமா..ஆமா என்று சொல்ல,பத்து நிமிடம் கழித்து பேசுங்க என்று சொல்லியிருக்குமே என்று முதியவர் கேட்க, வினோத்.. ஆமா,உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.
அவர்..தம்பி,கடந்த ஆறுமாதமா இந்த வீடு பூட்டிக் கிடக்கு.வாடகைக்கு கேட்டு வருபவங்க இந்த செல் போன் எண்ணுக்கு பேசுவாங்க..ஒரு பெண் பேசும்.வாடகை அட்வான்ஸ் சொல்லிவிட்டு பத்து நிமிடம் கழித்து பேசுறேன்னு சொல்லும்..ஆனா..பேசாது.என்று அடுக்கினார்.

வினோத்  ஏன் என்று கேட்க, அது உயிருடன் இல்லப்பா..ஆறு மாதத்துக்கு முன்னால இந்த வீட்டில தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டு..இங்கேயே ஆவியா சுத்துது.

அதனால அந்த பெண்ணின் பெற்றோர் இந்த வீட்டைப் பூட்டிட்டு அடுத்த தெருவில் உள்ள வேறு வீட்டுக்கு குடிபோயிட்டாங்க.
இந்த வீட்டில ஆவி நடமாட்டம் இருப்பதால யாரும் குடிவருவதில்லை என்று திகில் கதை சொன்னார்.
வினோத்துக்கு நம்ப முடியவில்லை. போனில் பேசிய பெண் இனிமையா பேசிச்சே என்று முதியவரிடம் சொல்ல..மோகினி குரல் இனிமையாகத்தான் இருக்கும்..அதிலேதான் ஆபத்தும் இருக்கும் என்றார்.

வினோத் அந்த முதியவரை கூர்ந்துப் பார்த்தான்.மோகினி போனில் பேசுமா..முதியவர் கதை விடுகிறாரா  என்று சந்தேகம் எழுந்தது.

திருப்பி போனில் வராது என்று சொல்கிறாரே..பத்து நிமிடம் நின்று பார்த்துவிட்டுப் போவோம் என்று நினைத்தான்.
முதியவர் விடவில்லை.தம்பி..என்ன யோசிக்கிறீயளா..8_ம் நம்பர் வீடு..எட்டு வச்சா தலையில் குட்டு வைக்கும்..வந்து பாத்தவங்க எல்லாம் ஓடிட்டாங்க …நீங்க என்று இழுத்தார்

.வினோத்..கொஞ்சம் நின்னுப் பார்த்திட்டுப் போறேன் என்க,முதியவர்..சரி..என்றபடி அங்கே நின்றார்.
பத்து நிமிடம் கழிந்தது.வினோத்தின் செல்நம்பர் ஒலித்தது. அந்தப் பெண்ணாக இருக்கலாம் என்று ஆவலோடு செல்போனை எடுத்து ஹலோ என்றபோது எதிர்முனையில் வினோத்தின் நண்பன் சுரேஷ் பேசினான்.

என்ன..வீடு பாத்தாச்சா என்று கேட்டவன்..ஊர் கதை உலககதை என்று இழுத்துக்கொண்டே போனான்.பேசினால் பத்து நிமிடம் பேசுவான்..வைக்கமாட்டான்..தவிர்க்க முடியாது.வினோத் வேண்டா வெறுப்பாக கேட்டுக்கொண்டிருந்தான்.
இன்கம்மிங் கால் ஒன்று வர  ,நான் பிறகு பேசுறன் என்று வினோத் சொல்லிப் பார்த்தான்..அவன் விடாப்பிடியாக..முக்கியமான விசயம் பேசணுமுன்னு மேலும் ஐந்து நிமிடம்..உப்பு சப்பு இல்லாததைப் பேசினான்.

வினோத்துக்கு கடுப்பாக இருந்தது.சரி வைக்கிறேன்.. வைக்கிறேன்..ஒரு கால் வருது என்று சொல்லியபடி இணைப்பைத் துண்டித்தான்.
அப்பாட ,அவசரமான நேரத்தில, கழுத்தை அறுக்கிறான்..அந்தப் பெண் பேசியிருக்கும்..என்று நினைத்த போது மீண்டும் செல் ஒலித்தது..

ஆ..அந்தப் பெண்ணாத்தான் இருக்கும் என்று ஆவலோடு செல்லை எடுத்தபோது..எதிர் முனையில் மீண்டும் அவனது நண்பன் சுரேஷ்..டேய்..ஏண்டா போனை கட் பண்ணின என்று கேட்க..வினோத்..இல்லைடா தானே கட்டாயிட்டு என்று சமாளிக்க..அவன் நண்பனோ..சரி..சரி..ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் கேளு என்றபடி..மறுபடியும்  பிளேடு போட,..

வினோத்..எரிச்சலுடன் உம்..உம் என்றபடி  நின்றான்.
அப்போது ஒரு இன்கம்மிங் கால் வந்தது.டேய்..அந்த பொண்ணு பேசும் கட் பண்ணு என்று வினோத் சொல்ல அவன் நண்பனோ..எந்தப் பொண்ணுடா,என்னிடம் சொல்லவே இல்லை என்று கேள்விக்கணைகளைத் தொடுக்க,

வினோத் உண்மையைச் சொல்லிப் பார்த்தான்..ஆனால் அவன் ஏற்றுக்கொள்ளாமல்  தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
வினோத்.நிலைகுலைந்து போனான்.சார்ஜ் தீர்ந்தவுடன்.டேய் பிறகு பேசுறண்டா..சார்ஜ் தீர்ந்திட்டு என்று போனை அவனது நண்பன் கட்செய்தான்.

வினோத்…அப்பாட தப்பிச்சேன்..காது கிழிஞ்சதப்பா என்று தடவிவிட்டபடி அந்த பெண் பேசிய எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டான்.

ரிங் போனது.யாரும் எடுக்கவில்லை. என்னடா வம்பாப் போச்சு..ஐந்து நிமிடம் கழித்து பேசுவோம் என்று காத்து நின்றான்.மீண்டும் தொடர்பு கொண்டான்.ரிங் போனது யாரும் எடுக்கவில்லை.

வினோத்துக்கு குப் என்று வியர்த்தது. ஒரு வேளை அந்த முதியவர் சொன்ன மோகினியாத்தான் இருக்குமோ என்று நினைத்தான்.
ச்சே..அப்படியிருக்காது..என்றவன் மறுபடியும் தொடர்பு கொண்டான்.
வழக்கம் போல் ரிங் போனது..பதில் இல்லை.

வினோத்.. அருகில் நின்ற முதியவரை முறைத்துப் பார்த்தான். அவரும் முறைத்தார். வினோத்..சரி..இந்த வீடு சரிப்பட்டு வராது என்றபடி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தபடி அங்கிருந்துப் புறப்பட்டான்..
முதியவர் சிறிய புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வந்த பெண் செல்போனில் மிஸ்ட்கால் இருப்பதைப் பார்த்து வினோத்துக்கு தொடர்பு கொள்ள முயல..தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தகவல்  ஒலிக்க

அந்த பெண் இருமுறை முயற்சி செய்துவிட்டு..கோபத்தில் செல்போனை தரையில் வீசினாள்..
மோட்டார்சைக்கிளில் சென்ற வினோத் சிக்னல் கிடைக்காத பகுதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். மோகினி பயம் அவனை வாட்டியது.
இளம்பெண்ணோ..பேச்சலர் என்றாலே பொறுப்பு கிடையாது.எப்போதும் யாரிடமாவது போனில் பேசுறது. போன் பண்ணினா எடுக்கிறதில்லை. பொறுப்பற்ற ஆளுக்கு வாடகைக்கு கொடுத்தா என்ன ஆவது..அந்த ஆளே வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

முதியவரோ..புரோக்கர் பீஸ் கொடுக்காம நீயாக வீட்டை வாடகைக்கு விட நினைக்கியா..பாப்போம்..மோகினி பிசாசு கதைவிட்டே வருகிறவங்களை துரத்திடுறன் அங்கிருந்து… என்று  கன்னத்தைத் தடவிக் கொண்டே நடையை கட்டினார் …!
வே.தபசுக்குமார்- முள்ளன்விளை, தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *