ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி: முதல் நாளில் புதுவையை வீழ்த்தியது தமிழ்நாடு; கோவில்பட்டி வீரர்கள் அசத்தல்

தமிழக அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்
ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி போட்டி இன்று(திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. இதற்காக தமிழக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர் ஜெய்கணேஷ் அடங்கிய குழுவினர் ரூர்கேலா சென்றுள்ளனர்.
போட்டியின் தொடக்க நாளில் நடந்த ஒரு போட்டியில் தமிழகம்-புதுச்சேரி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி வீரர்களின் அசத்தல் ஆட்டத்துக்கு புதுச்சேரி அணி வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் 6-1 என்ற கோல் தமிழக அணி அபார வெற்றி பெற்றது.

தமிழக அணியில் கோவில்பட்டி வீரர்கள் ஆனந்தராஜ், மாதவன் ,நவீன் ராஜ்குமார், இசக்கிமுத்து, சீனிவாசன், மணிசங்கர் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்து இருந்தது. அணியின் கேப்டனாக கோவில்பட்டி வீரர் ஆனந்தராஜ் இருந்தார்.
பெண்கள் அணியினர் பயிற்சி
இந்த போட்டியை தொடர்ந்து ஜூன் 27-ந் தேதி முதல் அதே மைதானத்தில் ஜூனியர் பெண்கள் தேசிய ஆக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணியில் கோவில்பட்டி வீராங்கனைகள் மும்மண்ஜா, முகேஸ்வரி , பாம்பிலா ஆகியோர் தேர்வாகி தமிழக அணிக்காக விளையாட உள்ளனர். தற்போது இவர்கள் ஜார்க்கன்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

கோவில்பட்டியில் இருந்து வீரர், வீராங்கனைகள் புறப்பட்டு சென்றபோது ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, மூத்த துணைத் தலைவர் நாகமுத்து, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, துணைத் தலைவர்கள் உமா சங்கர் ,அழகுதுரை, மணிமாறன், துணைச் செயலாளர்கள் முருகன், ,மாரியப்பன், சந்தானம், வழக்கறிஞர் பெரியதுரை மற்றும் உறுப்பினர்கள் தங்கராஜ், ஜார்ஜ் ஈஸ்டர் கிருஷ்ணமூர்த்தி வசந்த ராஜன் ஆகியோர் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

