• May 5, 2024

கோவில்பட்டியில் கி,ராஜநாராயணன் நினைவரங்கம் திறப்பு விழா பற்றி அமைச்சர் எ.வ.வேலு தகவல்

 கோவில்பட்டியில் கி,ராஜநாராயணன் நினைவரங்கம் திறப்பு விழா பற்றி  அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கரிசல்பூமி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடியில் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன், நெல்லை கண்காணிப்பு பொறியாளர் மாதவன், செயற்பொறியாளர் தேவி, உதவி பொறியாளர் கெங்கா பரமேஸ்வரி, நகரசபை தலைவர் கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.


ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு நினைவரங்கம் கட்டும் பணி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் முடிக்கப்படும். பிறகு முதல்-அமைச்சரிடம் தேதி பெற்று திறப்பு விழா குறித்து அறிவிக்கப்படும். சென்னையில் கூடுதல் விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களில் இருந்து நிலம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குரிய மக்களை நாங்கள் சந்தித்தபோது, அவர்கள் உரிய விலை தர வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வேலைவாய்ப்பை பொறுத்தவரை, தகுதிக்கேற்ப அரசின் சார்பில் வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தெரிவித்துள்ளேன். நிலம் எடுப்பை பொறுத்த வரை மூன்றரை மடங்கு விலை கொடுக்கப்படும் என்றும், அவர்கள் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்து அதற்கும் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளேன். மேலும் அவர்களுக்கு விமான நிலையத்தை ஒட்டிய நிலங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
சேலம் 8 வழி சாலையை பொறுத்தவரை நான் அமைச்சராக தனிப்பட்ட எந்த கருத்தையும் தெரிவிக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 10 சுங்கச் சாவடிகளை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இதனை அந்த அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *