• May 5, 2024

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் வழக்கம்போல் வெளியே நின்ற பஸ்கள்; ஒரு வழிப்பாதை திட்டத்திலும் குளறுபடி

 கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் வழக்கம்போல் வெளியே நின்ற பஸ்கள்; ஒரு வழிப்பாதை திட்டத்திலும் குளறுபடி

நாகா்கோவில்- திருநெல்வேலி- மதுரை மார்க்கமாக செல்லும் ஆம்னி உள்பட அனைத்து வகை பஸ்களும் சர்வீஸ் சாலையில் நின்று செல்லாமல் கூடுதல் பஸ் நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும் என்றும் 31-ந்தேதி முதல்(இன்று) இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. போக்குவரத்து மாற்றம் குறித்து முறையான அறிவிப்பு விடாமல் அவசரகதியாக அறிவித்து விட்டதாலும், எந்தவித முன் அறிவிப்பும் செய்யப்படாதாலும் இந்த தகவல் மக்களை சென்றடையவில்லை.
கூடுதல் பஸ் நிலையம் செயல்படாததால் சுகாதாரகேடுகள் பெருகி காட்சி அளிக்கிறது. அதனை சரி செய்யவில்லை. பிளாட்பார தரைகள் பெயர்ந்து போய் உள்ளன. பஸ்கள் நிற்குமிடம் குண்டும் குழியுமாக இருக்கிறது, இதையெல்லாம் சரி செய்யாமல் பஸ்கள் உள்ளே சென்று திரும்பும் என்ற அறிவிப்பு சரியானதாக இல்லை.
பஸ் நிலைய கடைக்காரர்களை அழைத்து பேசி முதலில் அவர்களை கடைகளை திறக்க செய்து இருக்க வேண்டும். அதன்பிறகு பஸ்கள் உள்ளே சென்று வர சில நாட்கள் அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும். இவற்றை செய்ய போலீசார் மறந்து விட்டார்கள்.
இதனால் இன்று அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்பும் என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை.
வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு வெளியே தான் பயணிகள் நின்று கொண்டு இருந்தார்கள். திருநெல்வேலி மற்றும் மதுரை மார்க்கமாக சென்ற பஸ்கள் வழக்கம் போல் பஸ்நிலையம் வெளியே சர்வீஸ் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சென்றன.

கூடுதல் பஸ்நிலையத்தில் ஒருபகுதி


இதே போல் கோவில்பட்டி நகரில் ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்தன.
தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா் ஆகிய ஊா்களிலிருந்து கோவில்பட்டி வரும் பஸ்கள், எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் சாலை, பார்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. காலை நேரத்தில் இது போல் நடைபெற்றது. பகலில் போக்குவரத்து போலீசார் கண்களில் படாவிட்டால் அரசு பஸ் டிரைவர்கள் புதிய வழித்தடம் வழியாக செல்லாமல் புதுரோடு வழியாக செல்ல தொடங்கினர்.

அவர்களை மாதாங்கோவில் சந்திப்பில் நின்ற போலீசார் அங்கிருந்து மாதாங்கோவில்,கதிரேசன் கோவில் வழியாக திருப்பி விட்டார்கள்.
மதுரை, விருதுநகா் பகுதிகளிலிருந்து கோவில்பட்டி வரும் பஸ்கள், தோட்டிலோவன்பட்டி வழியாக ரெயில் நிலையம், புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் சாலை, பார்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்லவேண்டும். ஆனால் ஒரு சில பஸ்கள் போலீசார் அசந்த நேரத்தில் மெயின்ரோடு வழியாக சென்றதை காண முடிந்தது.
அண்ணா பஸ் நிலையத்திலிருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே இளையரசனேந்தல் ரோடு சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது, ஆனால் பூக்கடை பகுதியில் இருந்து மெயின்ரோட்டில் வந்து இளையரசனேந்தல் ரோட்டில் வாகனங்கள் திருப்பி சென்றன.
போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டபடி இருந்தனர். ஆனால் அதனை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *