கோவில்பட்டி சொர்ணமலையில் 123 அடி உயர முருகன் சிலை அமையுமா… பூமி பூஜையுடன் முடிந்ததா?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்துள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் சொர்ணமலை கதிரேசன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலுக்கு முன்பெல்லாம் படிக்கட்டு வழியாக நடந்து மட்டுமே செல்ல முடியும்.
நாளடைவில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக புதிதாக பாதை அமைக்கபட்டது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்து இருக்கிறது.
கோவில்பட்டி பழைய பஸ்நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலும் இந்த கோவில் உள்ளது.
இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல் தான் மூலவராக காட்சி அளிக்கிறார். தினசரி பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில்முருப்பெருமான் போல் சந்தனத்தில் வேலுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நாட்கள் மிகவும் சிறப்பபானதாக இருக்கும். பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.
சொர்ணமலை கதிரேசன் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 வரையிலும். மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது இக்கோவிலில் 123அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. மலேசியாவில் உள்ள முருகன் சிலை வடிவத்தில் இந்த சிலை ரூ.9 கோடி செலவில் நிறுவப்படும் என்று அறிவித்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின.
மலைக்கோவிலின் முன்புறத்தில் இருக்கும் பாறைகளை தகர்த்து சமப்படுத்தி அந்த இடத்தில் மண்டபம் அமைத்து அதன் மேல்புறத்தில் 12 அடி உயர பீடத்தில் 123 அடி முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் அந்த மண்டபத்துக்குள் சிறிய அளவில் மாதிரி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 123 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.
இந்த சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது,.
சொர்ணமலையில் பிரமாண்ட முருகன் சிலை அமைந்து விடும். கோவில்பட்டியின் புதிய அடையாளமாக அது இருக்கும் என்ற பேராசையில் கோவில்பட்டி மக்கள் இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதே சமயம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜூ வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.ஆனார். ஆனால் பூமி பூஜை நடந்த 123 அடி உயர முருகன் சிலை அமைந்த பாடில்லை.அதற்கான முயற்சியும் நடப்பதாக தெரியவில்லை. இதனால் கோவில்பட்டி மக்களின் ஆசை நிராசை ஆகிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இப்போதைய தி.மு.க. அரசு சொர்ணமலையில் முருகன் சிலை உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அப்படியே விட்டுவிடாமல் தீவிர முயற்சி மேற்கொண்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
–S.K.T.S. திருப்பதிராஜன்—